15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை


15-ந் தேதி முதல் 61 நாட்கள்  மீன் பிடிக்க தடை
x
தினத்தந்தி 12 April 2022 4:20 PM GMT (Updated: 12 April 2022 4:20 PM GMT)

குமரி கிழக்கு கடலோர பகுதிகளில் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில்:
குமரி கிழக்கு கடலோர பகுதிகளில் 15-ந் தேதி முதல் 61 நாட்கள்  மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
61 நாட்களுக்கு தடை
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 -ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. 
இந்த நாட்களில் குமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் மீனவர்கள் இழுவலை விசைப்படகு அல்லது தூண்டில் போன்றவை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
நடவடிக்கை
இந்த தடையை மீறி மீன்பிடித் தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 -ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்பட்டு மானிய டீசலும் நிறுத்தம் செய்யப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story