தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 April 2022 4:13 PM GMT (Updated: 14 April 2022 4:13 PM GMT)

தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி :

தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில்  இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில், கணேச கந்தபெருமாள் கோவில், சந்தை மாரியம்மன் கோவில், அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோவில் உள்பட நகர் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுபோல் உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
மாவூற்று வேலப்பர் கோவில்
ஆண்டிப்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி மற்றும் பால்குடம், தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் மாவூற்று வேலப்பருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தேனி மட்டுமின்றி மதுரை திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக வந்து முருகனை வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தால் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
போடி
போடியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். போடி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தெற்கு நோக்கி தனி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கம்பம்
கம்பத்தில் உள்ள கம்பராயபெருமாள் கோவில், கவுமாரியம்மன் கோவில், சுருளி வேலப்பர் கோவில், வேணுகோபாலகிருஷ்னன் கோவில், நந்தகோபாலன் தம்பிரான் மாட்டு தொழு, ஆதிசக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் குருப்பெயர்ச்சி நடைபெற்றதால் கம்பம் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
சுருளி அருவி
சுருளி அருவியில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். கோடை மழை பெய்த நிலையில் அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் பக்தர்கள் உற்சாகத்துடன் நீராடினார்கள். 
பின்னர் அங்குள்ள ஸ்ரீ பூத நாராயணசாமி கோவில் மற்றும் வனப்பகுதியில் உள்ள கைலாசநாதர் குகை கோவிலில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
சுருளி அருவியில் ஒரு நபர் குளிக்க ரூ.30 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் விசேஷ காலத்தில் பக்தர்கள் அதிகம் கூடுவதால் குளிக்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று வனத்துறையினர் அறிவித்தனர். அதன்படி இன்று வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

-----------
3 படங்கள் சேர்த்து 3 காலம்
-------------
தமிழ் புத்தாண்டையொட்டி மாவூற்று வேலப்பர், போடி சீனிவாச பெருமாள், குருப்பெயர்ச்சியையொட்டி கம்பம் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

Next Story