தீயணைப்பு நிலையங்களில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு


தீயணைப்பு நிலையங்களில்  நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 14 April 2022 4:25 PM GMT (Updated: 14 April 2022 4:29 PM GMT)

தீயணைப்பு நிலையங்களில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களிலும் நீத்தார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக, தேனி தீயணைப்பு நிலையத்தின் முன்பு நீத்தார் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் குமரேசன் தலைமை தாங்கி, நினைவுத்தூணின் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரியகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் பழனிசாமி வீர மரணம் அடைந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
போடி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீ விபத்து மற்றும் உயிர் மீட்பு சமயத்தின் போது இறந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்து போடி பஸ் நிலையம் மற்றும் தேவர் சிலை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
கம்பம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழா நடந்தது. அதையொட்டி நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் கம்பம் வடக்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து சிக்னல், காந்திசிலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Next Story