தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 April 2022 4:28 PM GMT (Updated: 14 April 2022 4:28 PM GMT)

தமிழ் புத்தாண்டையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்

தமிழ் புத்தாண்டையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டு வழிபாடு

சித்திரை மாத முதல் நாள் தமிழ் புத்தாண்டாக புத்தாண்டையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டனர். பின்னர் குளித்து புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். வழக்கமாக மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். நேற்று ஏராளமான பக்தர்கள் வந்ததால் நடை சாத்தப்படவில்லை. பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்தனர்.

வேங்பங்காடு பகவதி அம்மன்

இதேபோல, ரத்தினகிரி பாலமுருகன் கோவிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாள், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவில், சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

வேலூர் வேலப்பாடி வேப்பங்காடு பகவதி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

வேலூரை அடுத்த பாலமதி முருகர் கோவில் மலையடிவாரத்தில் வெற்றிவேல் முருகர் கோவில் உள்ளது. இங்கு 29 அடி உயரத்தில் ஒரே கருங்கல்லால் ஆன வெற்றி வேல்முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனசேகர் செய்திருந்தார். இதேபோல மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story