பல ஆண்டுகளாக செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த 300 பேர் அரசின் உதவியால் முதலாளி ஆனார்கள்


பல ஆண்டுகளாக செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த 300 பேர் அரசின் உதவியால் முதலாளி ஆனார்கள்
x
தினத்தந்தி 15 April 2022 8:52 AM GMT (Updated: 15 April 2022 8:52 AM GMT)

பல ஆண்டுகளாக செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த 300 பேர் அரசின் உதவியால் செங்கல் சூளையின் முதலாளி ஆகியுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்கொண்டுள்ளார்.

திருத்தணி,

கொத்தடிமைகளை மீட்பதோடு மட்டுமல்ல, அவர்களை ஒரு தொழிலின் முதலாளியாகவும் மாற்ற முடியும் என்ற புதிய இலக்கணத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தற்போது எழுதியிருக்கிறார்.

அந்த மாவட்டத்தில் 2003-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுகளுக்குள் 100 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் கொத்தடிமை நிலையில் இருந்து மீட்கப்பட்டனர். கொத்தடிமையாக இருந்தபோது அவர்கள் பார்த்த வேலையையே, தற்போது அவர்களின் வாழ்வாதார தொழிலாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாற்றி கொடுத்துள்ளார் என்பது சிறப்பான ஒன்றாகும்.

கொத்தடிமை நிலையில் இருந்து சிலர் மீண்ட பின்னரும் கூட அன்றாட வாழ்க்கைக்கும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் கடும்பாடுபட்டு வந்தனர். அவர்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒருங்கிணைத்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்.

அவர்கள் ஒரு சுய உதவிக்குழுக்களாக இயங்குவதற்காக ரூ.5.83 லட்சம் முதலீட்டு தொகைக்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து அளித்துள்ளது. அதோடு அவர்களின் தொழிலுக்காக செங்கல் சூளையை நிறுவுவதற்காக, வீரகநல்லூர் கிராமத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பை மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டு அளித்துள்ளது.

மேலும், அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வெளியே வந்த அவர்களே முதலாளிகளாக இருந்து நடத்தும் அந்த செங்கல் சூளைக்கு ‘சிறகுகள் செங்கல்’ என்ற மிகச்சரியான அர்த்தம் தரும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கல் சூளைக்கு தேவையான தண்ணீர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, அந்த சூளையில் தயாரிக்கப்படும் செங்கற்களை, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்திற்காக வாங்கிக்கொள்ளவும், அதன்மூலம் அவர்களுக்கு லாபத்தில் பங்கு கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட கலா (வயது 41) கூறியதாவது:-

எனது சொந்த ஊர் திருத்தணி அருகேயுள்ள சூரியநரகரம். 2003-ம் ஆண்டு எனது பிரசவத்திற்காக கணவர் மணி ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினார். அதை வேலை செய்து கழிப்பதாக ஒப்பந்தமும் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து முருகம்பேடு செங்கல் சூளை ஒன்றில் 2003-ம் ஆண்டு முதல் பணியாற்றினோம்.

5 ஆண்டுகள் கொத்தடிமையாக அங்கு கடுமையாக பணியாற்றிய நிலையில் அரசு எங்களை 2008-ம் ஆண்டு மீட்டது. தற்போது சிறகுகள் செங்கல் சூளையின் உரிமையாளர் என்ற நிலையை எட்டியிருப்பது, உண்மையிலேயே எனக்கு சிறகடித்து பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. நான் தொடர்ந்து பறப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெகதீசன் (30) என்பவர் கூறும்போது, ‘‘நாங்களே எங்கள் சொந்தக்காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்தி தந்துள்ளனர். அரசின் உதவி இல்லாமல் இது எங்களுக்கு நடந்திருக்காது” என்று குறிப்பிட்டார்.

மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-

செங்கல் சூளை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் 300 பேரும் இனி சிறகுகள் செங்கல் சூளையின் முதலாளியாக இருப்பார்கள். அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யோசனையின் விளைவாக இந்த வழி பிறந்தது.

அரசே அவர்களுக்கான முதலீட்டை வழங்குவதால், அவர்களுக்கு நிதி தொடர்பான சுமைகள் இருக்காது. தற்போது அவர்கள் முதலாளிகள். அவர்கள் ‘ஷிப்ட்’ கணக்கில் அங்கு பணியாற்றலாம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியின் மூலம் அங்கு கொட்டகை போடுகிறோம்.

அந்த 300 பேரில் 60 பேர் திறமையான, மரம் வெட்டுபவர்களாக உள்ளனர். அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளன. அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள காட்டு கருவேல மரங்களை வெட்டுவார்கள். அவை செங்கல் சூளையின் எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

நிலத்தை பயன்படுத்தும் உரிமையையும், முதலீட்டு தொகையையும் அரசே வழங்குவது புதிய மாதிரியாகும். நாங்கள் அவர்களின் பணியை கண்காணிப்போம். அதில் பிரச்சினை இருந்தால் அதை தீர்த்து வைப்போம்.

அரசு செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கையை கொண்டு வரும் புதிய முயற்சி இது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story