அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நாள்


அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நாள்
x
தினத்தந்தி 17 April 2022 10:21 PM GMT (Updated: 17 April 2022 10:21 PM GMT)

அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நாளை மாணவர்கள் கண்டுகளித்தனர்.

திருச்சி:
சூரியனை வைத்து பல்வேறு பொருட்களுடைய நிழலின் நீளங்களை உற்று நோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும். ஒரு வருடத்தின் 2 நாட்களில் மட்டுமே பொருளின் நிழல், அப்பொருளுக்கு மிகச்சரியாகக் கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை உச்சி வேளையில் காண இயலாது. அந்த நாட்கள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நாளை உற்றுநோக்குவதன் மூலம் நம்மால் சூரியனின் இயக்கம், பூமியின் ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறியலாம். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் பூமியின் விட்டத்தை கண்டுபிடித்தனர். இந்தநிலையில் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வரும் பூஜ்ஜிய நிழல் தினம் நேற்று திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையத்தில் உற்றுநோக்கப்பட்டது. இதையொட்டி அங்கு 2 குழாய்கள் வைத்து பார்வையாளர்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. நேற்று மதியம் 12.24 மணியளவில் சூரியனின் நிழலானது சரியாக நேர்க்குத்தாகக் கீழே விழுந்தது. அப்போது, அந்த குழாய்களின் நிழல் தெரியவில்லை. மனிதர்களின் நிழல் அவர்கள் காலடியிலேயே இருந்தது.
இதுபோன்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதால் அறிவியல் மனப்பான்மையையும், ஆராய்ச்சி சிந்தனையையும் குழந்தைகளிடம் வளர்க்க முடியும் என்று அறிவியல் மையத்தினர் தெரிவித்தனர். நேற்று திருச்சியில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் இந்த அரிய நிகழ்வினை கண்டுகளித்தனர்.

Next Story