தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது


தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 17 April 2022 10:21 PM GMT (Updated: 17 April 2022 10:21 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

சமயபுரம்:

வையாளி கண்டருளும் நிகழ்ச்சி
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று (திங்கட்கிழமை) அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக தேரில் போடப்பட்டிருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு தேர் சுத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டு, முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story