‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 April 2022 10:25 PM GMT (Updated: 17 April 2022 10:25 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர்

கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரியம் உள்ளது. இங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. எனவே தேங்கி இருக்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றி, அந்த பகுதியில் சுகாதாரத்தை பேணிக் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கிருஷ்ணகிரி.
====
வீணாகும் குடிநீர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலையில் ஓடி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்து, அங்கு சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சுரேஷ், அனுமந்தபுரம், தர்மபுரி.
===
மழைநீர் தேங்கிய சாலை 

சேலம் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 24-வது வார்டுக்குட்பட்ட அங்கம்மாள் காலனியில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தார்சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு ஒரு மாத காலமாகிறது. இதுவரை தார் சாலை அமைக்க பணிகள் தொடங்கவில்லை.  இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

-ஊர்மக்கள், அங்கம்மாள் காலனி, சேலம்.
===

குடிநீர் தட்டுப்பாடு

சேலம் மாவட்டம் பி.நல்லாகவுண்டம்பட்டி புதுகாலனி பகுதியில் குடிநீர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவார்களா?

-அசோகன், பி.நல்லாகவுண்டம்பட்டி, சேலம்.
==
அடிக்கடி விபத்து

ஓசூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் மிடிகரபள்ளி செல்லும் வழியில் ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரசு கல்லூரி மாணவர்கள், மிடிகரபள்ளி, ஓசூர்.
===
சுரங்கப்பாதை கட்டப்படுமா?

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் புத்தூரை அடுத்த பெரியார் நகர் ரெயில்வே பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக டவுன் பஸ்கள் வராததால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் முன்வருவார்களா?

-பி.சோமு, பெருமாம்பட்டி, சேலம்.
===
பயன்படாத நூலகங்கள்

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. இதே போல ஊர்ப்புற நூலகங்களின் பல கட்டிடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. இந்த கட்டிடங்களை சீரமைத்து வாசகர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-எஸ்.வடிவேல், மேச்சேரி.
==

Next Story