உப்பள்ளியில் கலவரம்; 12 போலீசார் காயம்-77 பேர் கைது


உப்பள்ளியில் கலவரம்; 12 போலீசார் காயம்-77 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2022 10:28 PM GMT (Updated: 17 April 2022 10:28 PM GMT)

வாட்ஸ்-அப்பில் பரவிய தகவலால் உப்பள்ளியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. இதில் 12 போலீசார் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் உப்பள்ளி நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது

பெங்களூரு: வாட்ஸ்-அப்பில் பரவிய தகவலால் உப்பள்ளியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. இதில் 12 போலீசார் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் உப்பள்ளி நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

போராட்டம்-பேச்சுவார்த்தை

கர்நாடகாவின் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலத்தில் வாலிபர் ஒருவர் காவி கொடி ஏற்றியதாக, அதுதொடர்பான தகவல் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரவியது. 
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். 

அவர்கள் கைதான வாலிபரை தங்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர். ஆனால் போலீசார் அவரை, ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். பின்னர் இரவு 11.30 மணி அளவில் ஏராளமானோர் மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தெரிவித்தனர். 
இருப்பினும் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு திரண்டிருந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் ஒரு அமைப்புக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது போலீசார் அமைதியாக கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். 

பயங்கர கலவரம் வெடித்தது

அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் திடீரென போலீஸ் நிலையம் மீதும், போலீசார் மீதும் கற்களை வீசி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. போலீஸ் நிலைய வளாகம் மற்றும் போலீஸ் நிலையம் முன்பு நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். 

இந்த தாக்குதலில் 7 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அந்தப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. 
வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 12 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் வன்முறையாளர்கள் போலீஸ் நிலையம் மட்டுமின்றி அங்கிருந்த ஆஸ்பத்திரி மற்றும் கோவில் மீதும் கல்வீசி சேதப்படுத்தினார்கள்.

துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை உணர்ந்த போலீசார் தடியடி நடத்தி வன்முறையாளர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். ஆனாலும் தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியில் ரப்பர் குண்டு வைத்து வானத்தை நோக்கி சுட்டும் கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.  இதையடுத்து நள்ளிரவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த வன்முறை சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமும், பெரும் பரபரப்பும் நிலவியது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். 

77 பேர் கைது

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உப்பள்ளி நகர் முழுவதும் நேற்று காலை முதல் வருகிற 20-ந்தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தி மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராம் உத்தரவிட்டுள்ளார். 

இதனால் நகரில் முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story