சட்டசபை தீர்மானங்கள் நிலுவை விவகாரம்: தமிழக கவர்னரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்-கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் பேட்டி


சட்டசபை தீர்மானங்கள் நிலுவை விவகாரம்: தமிழக கவர்னரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்-கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் பேட்டி
x
தினத்தந்தி 17 April 2022 10:29 PM GMT (Updated: 17 April 2022 10:29 PM GMT)

சட்டசபை தீர்மானங்கள் நிலுவை விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சேலத்தில் கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சட்டசபை தீர்மானங்கள் நிலுவை விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சேலத்தில் கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கவர்னர் பேட்டி
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்ட முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை அடிப்படையிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கினேன். அதை பின்பற்றுவது மத்திய, மாநில அரசுகளின் உரிமை ஆகும்.
சிறப்பாக செயல்படுகின்றனர்
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு ஒரு உதாரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை கூறலாம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இங்கு ஆட்சியாளர்கள் எல்லோரும் நன்றாக பணியாற்றி வருகிறார்கள்.
அரசியல் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தில், கவர்னரின் பணிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பணிகளும் உள்ளது. இதனால் தமிழக முதல்-அமைச்சரும், கவர்னரும் அவர்களுக்கான அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டு வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சரும், கவர்னரும் ஏட்டிக்கு போட்டியாக செயல்படவில்லை.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிலுவையில் உள்ள விவகாரத்தில் பொறுத்திருந்து பாருங்கள். சுகாதார ஆய்வாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலப்பணியாளர்கள் தான் அடிமட்ட பணியில் இருக்கிறார்கள்.
இவ்வாறு கேரள மாநில முன்னாள் கவர்னர் சதாசிவம் பேசினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story