பெண் தபால் ஊழியரை கடத்த முயற்சி


பெண் தபால் ஊழியரை கடத்த முயற்சி
x
தினத்தந்தி 19 April 2022 4:19 PM GMT (Updated: 19 April 2022 4:19 PM GMT)

தேனியில் ஆட்டோவில் பெண் தபால் ஊழியரை டிரைவர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி: 

தேனி அல்லிநகரம் வள்ளிநகர் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்த மன்மதன் மனைவி முருகேஸ்வரி (வயது 34). இவர், போடி தபால் அலுவலகத்தில் தபால் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பணி முடிந்து போடியில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்து விட்டு, தேனியில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 16-ந்தேதி அவர் பணி முடிந்து தேனி பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து அல்லிநகரம் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். நேரு சிலையை கடந்து அந்த ஆட்டோ பெரியகுளம் சாலையில் செல்லாமல் கம்பம் சாலையில் திரும்பிச் சென்றது. 

இதுகுறித்து ஆட்டோ டிரைவரிடம் முருகேஸ்வரி கேட்டபோது, பெட்ரோல் நிரப்பிவிட்டு திரும்பி வருவதாக அவர் கூறினார். ஆனால், பழனிசெட்டிபட்டியில் உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து ஆட்டோ சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த முருகேஸ்வரி ஆட்டோவை நிறுத்த சொன்னார். ஆனால், அவர் நிற்காமல் அவரை கடத்தி செல்ல முயன்றார். இதையடுத்து ஆட்டோவில் இருந்து முருகேஸ்வரி கீழே குதித்தார். இதில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. 

ஆனால், அந்த ஆட்டோ அங்கே நிற்காமல் சென்று விட்டது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story