ரூ50 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ50 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 19 April 2022 4:21 PM GMT (Updated: 19 April 2022 4:21 PM GMT)

ரூ50 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

முத்தூர்:
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
தமிழகத்தில் தேங்காய் பருப்பு விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றி வருவது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகும். இதன்படி வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எவ்வித இடை தரகு ஏதுமின்றி தேங்காய் பருப்பு ஏலம் முறையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 122 விவசாயிகள் 1149 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். 
இவற்றின் மொத்த எடை 59 ஆயிரத்து 452 கிலோ ஆகும். இதில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ 81.75-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.90.60-க்கும் சராசரி விலையாக ரூ.85.95--க்கும் ஏலம் விடப்பட்டது. ஆனால் கடந்த வார சராசரி விலை ரூ.82.35 ஆகும். இது கடந்த வாரத்தை விட ரூ.3.60 கூடுதல் ஆகும்.
தேங்காய் பருப்புக்கு கூடுதல் விலை
மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 732 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாக ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. மேலும் இவற்றின் எடையும் கடந்த வாரத்தை விட 35 ஆயிரத்து 243 கிலோ குறைவாகும். ஆனாலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் பருப்புக்கு ரூ.1.90 விவசாயிகளுக்கு கூடுதலாகவே கிடைத்தது. இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.50 லட்சத்து 74 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் ஈரோடு, அவல் பூந்துறை, காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், நஞ்சை ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த மொத்த தேங்காய் பருப்பு கொள்முதல் வியாபாரிகள் பலர் நேரில் கலந்து கொண்டனர். முடிவில் தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் விற்பனை தொகை செலுத்தப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Next Story