தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 20 April 2022 9:21 AM GMT (Updated: 20 April 2022 9:21 AM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99626 78888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

செய்தி வந்தது; தீர்வு கிடைத்தது

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் சுவற்றில் இருந்து குடிநீர் கசிந்து, படிக்கட்டுகளில் தேங்கி இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்தநிலையில் குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு உள்ளது. துறை அதிகாரிகளுக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

முறிந்து விழும் நிலையில் மரம்


சென்னை கொளத்தூர் மக்காரம் தோட்டம் பகுதியில் சாலையோரம் பெரிய மரம் ஒன்று உள்ளது. பட்டுபோன இந்த மரம், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் வகையில் ஆபத்தாக காட்சி அளிக்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- உதயகுமார், கொளத்தூர்.

முள்செடிகள் அகற்றப்படுமா?

சென்னை அய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரம் சாய்ராம் நகர் போகைன்வில்லாவை சுற்றியுள்ள பகுதிகளில் முள் செடிகள் படர்ந்து காடு போல் காட்சி தருகிறது. இதனால் விஷ பூச்சிகள், பாம்புகள் போன்றவை வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் இப்பகுதி மாறி வருகிறது. எனவே இந்த முள்செடிகளை அகற்றி பாதுகாப்பான சூழலை உரிய அதிகாரிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.

- வையாபுரி, ஐய்யப்பன்தாங்கல்.

பராமரிப்பில்லாத பூங்கா


சென்னை கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கும் அன்னை அஞ்சுகம் பூங்கா வளாகம் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. குப்பைகளும் சேர்ந்து அந்த இடமே அலங்கோலமாக காட்சி தருகிறது. பூங்காவில் இருக்கை உள்ளிட்ட உபகரணங்களும் உடைந்து சேதமடைந்து உள்ளன. இந்த பூங்கா சீரமைக்கப்படுமா? என்பதே இப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- ராஜன், கிழக்கு தாம்பரம்.

போதை ஆசாமிகள் அட்டூழியம்

சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தை இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் ‘பார்’ போலவே பயன்படுத்தி வருகிறார்கள். மதுகுடித்தும், போதை வஸ்துகளை பயன்படுத்தியும் ரகளை செய்கிறார்கள். காலியான மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் பயணிகள் முகம் சுழித்தவாறே அப்பகுதியை கடந்து செல்லவேண்டி உள்ளது.

- ரோஷித், கோடம்பாக்கம்.

இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகள்


சென்னை சூளைமேடு ஸ்ரீராமபுரம் ரேஷன் கடை அருகில் உள்ள மரத்தின் கிளைகள் படர்ந்து விரிந்துள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது மரக்கிளைகள் உடைந்து கீழே விழுகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே ஆபத்தான மரக்கிளைகளை வெட்டிவிட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

- ஈஸ்வரன், சூளைமேடு.

குளத்தில் கலக்கும் கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை புதூர் குளத்தில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிப்படைவதோடு, குளத்தில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த குளத்தில் கழிவுநீர் கலக்காதவாறு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

- சத்குரு, பள்ளிப்பட்டு.

மின்விளக்கு இல்லா சுரங்கப்பாதையால் அச்சம்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வி.கே.நகரில் உள்ள சுரங்கப்பாதையில் இதுவரை மின்விளக்கு வசதி என்பதே இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். பெண்கள், பள்ளி மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் இந்த சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

- சுந்தர், அச்சரப்பாக்கம்.

பொதுமக்களின் சிரமம் தீருவது எப்போது?

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பூம்பொழில் நகர் தாழம்பூ தெருவில் மின்விளக்குகள் இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். இரவில் பணி முடிந்து வீடு திரும்புவோர் நிலைமை இன்னும் பாவமாக இருக்கிறது. கொள்ளை போன்ற சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகிறது. இந்த நிலை மாற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ராஜா, ஆவடி.

வேகத்தடை ஏற்படுத்தி தரப்படுமா?


காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் பழையசீவரம் சாலையில் பட்டா கூட்டு சாலை பிரிந்து செல்லும் இடம் வளைவான பகுதியாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

- ஜோதி, சாலவாக்கம்.

Next Story