மீன்பிடி வலையில் சிக்கி காயம்: உயிருக்கு போராடிய ஆமை சிகிச்சைக்கு பிறகு கடலில் விடப்பட்டது


மீன்பிடி வலையில் சிக்கி காயம்: உயிருக்கு போராடிய ஆமை சிகிச்சைக்கு பிறகு கடலில் விடப்பட்டது
x
தினத்தந்தி 21 April 2022 9:46 AM GMT (Updated: 21 April 2022 9:46 AM GMT)

சென்னையை அருகே மீன்பிடி வலையில் சிக்கி காயமடைந்து உயிருக்கு போராடிய ஆமையை சிகிச்சைக்கு பிறகு தன்னார்வலர்களால் படகு மூலம் கடலில் விடப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலரான மீனவர் சக்கரவர்த்தி (வயது 55), கூவத்தூர் அடுத்த பழைய நடு குப்பத்தில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி சக மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். அப்போது சுமார் 5 நாட்டிக்கல் மைல் தூரம் சென்றதும் அங்கு ‘கோஸ்ட் நெட்’ எனப்படும் சுமார் 1½ டன் எடை கொண்ட ராட்சத மீன்பிடி வலையில் ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் சிறிய ரக கடல் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி தவித்த ஆமையை வலையில் இருந்து விடுவித்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு நீலாங்கரையில் உள்ள தன்னார்வ நிறுவனத்திடம் ஒப்படைத்தார். 5 வயது கொண்ட அந்த ஆமை, சுமார் 2 ஆண்டுகளாக ராட்சத வலையில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆமையின் முன்புற வலது பக்க துடுப்பு மற்றும் தொண்டை பகுதிகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு ராட்சத வலையினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆமைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முன்பக்க வலது துடுப்பு முழுவதுமாக நீக்கப்பட்டது. ‘ஷகி’ என்று பெயரிடப்பட்டு உள்ள ஆமை சிகிச்சையில் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று தன்னார்வலர்களால் படகு மூலம் நீலாங்கரை கிழக்கு கடல் பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று நடுக்கடலில் விடப்பட்டது.

ஒரே ஒரு முன்பக்க துடுப்பு இருந்தாலும், கடலில் விட்டதும் உற்சாகத்துடன் ஆமை நீந்திச் சென்றது.

Next Story