புழல் அருகே பட்டப்பகலில் துணிகரம்: தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகை திருட்டு


புழல் அருகே பட்டப்பகலில் துணிகரம்: தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 21 April 2022 10:14 AM GMT (Updated: 21 April 2022 10:14 AM GMT)

புழல் அருகே பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் வெங்கடேசாய் நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 60). இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி சந்திரமதி (56). இவர் சென்னை அசோக் நகர் ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.

நேற்று காலை பாண்டியன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி சந்திரமதியை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் காலை 11 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

பாண்டியன், தனது மனைவியை பள்ளிக்கூடத்தில் விட அழைத்து செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story