பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு


பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2022 10:07 AM GMT (Updated: 29 April 2022 10:07 AM GMT)

பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் 150 தண்ணீர் லாரிகள், 12 தீயணைப்பு வாகனங்களுடன் 300 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் குப்பைகள் தொடர்ந்து புகைந்து கொண்டே இருப்பதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, போலீஸ், சென்னை குடிநீர் வாரியம் இணைந்து குப்பை கிடங்கில் எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளை தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது ‘ஸ்கை லிப்ட்’ தீயணைக்கும் எந்திரத்தில் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தீயணைப்புத்துறை டி.ஜி.பி. வி.கே.ரவி ஆகியோர் 100 அடி உயரத்துக்கு மேலே சென்று குப்பை கிடங்கில் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் விஜயராஜ் குமார், மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் வ.பாபு, ஜெ.கே.மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடுமையான வெயில் காரணமாக குப்பைகளில் மீத்தேன் வாயு உருவானதால் தீ அதிகமாக பரவி உள்ளது. தீயணைப்பு துறை, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் என 3 துறைகளை சேர்ந்த 300 பேர் குப்பை கிடங்கில் எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 150 தண்ணீர் லாரிகள், 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.

கோடை காலம் முடியும் வரை இப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள குப்பை கிடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புகையால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். அருகில் உள்ள பகுதிகளில் 3 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

தீ அதிகமாக பரவாமல் இருக்க தீ ஏற்பட்ட குப்பை கிடங்கு பகுதி மற்ற பகுதிகளில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் தனியாக துண்டிக்கப்பட்டுள்ளது. தீ பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் 15 ஏக்கர் பகுதி குப்பை கிடங்குகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கை அகற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள குப்பை கிடங்குகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story