வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 5 May 2022 6:45 PM GMT (Updated: 5 May 2022 1:04 PM GMT)

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

நீடாமங்கலம்:-

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகசூல் பாதிப்பு

எலிகளால் நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எலிகளின் சிறுநீர், அதன் புழுக்கை, ரோமங்கள் மற்றும் துர்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தம் ஏற்பட்டு அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. 
நெற்பயிரில் அனைத்து பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும். எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை ஒழிக்கலாம். 

பறவை குடில்

எலி பொறிகளை வைத்து எலிகளை பிடித்து கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம். 5 கிராம் ப்ரோமோடயலான் (0.25 சதவீதம்) ரசாயன பூச்சிக்கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதவீதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி உணவு வகைகளான அரிசி, பொரி, கருவாடு, கடலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் சேர்த்து உருண்டையாக பிடித்து வயல்களில் வைக்க வேண்டும். 
ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக 3 அல்லது 4 நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story