திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 May 2022 6:30 PM GMT (Updated: 5 May 2022 1:07 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்:-

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு ஆழித்தேரோட்ட விழா கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி நடைபெற்றது. இதனுடன் மற்றொரு சிறப்பம்சமாக தெப்பத்திருவிழா நடைபெறும். 
தியாகராஜர் கோவில் எதிரே உள்ள கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும். குளமே ஆலயமாக போற்றப்படும் கமலாலய குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது. 

தெப்பம் கட்டும் பணி

இந்த குளத்தில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 8 மணிக்கு தொடங்கி 3 முறை குளத்தை தெப்பம் வலம் வரும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
இந்த தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடியும், உயரம் 18 அடியும் உடையதாகும். இதில் 800 பேர் வரை அமர முடியும். விழாவையொட்டி தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி குளக்கரையில் காலி பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. 

மரப்பலகை-பேரல்

இந்த பேரலில் காற்று நிரப்பி முதலில் நன்றாக சோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மரப்பலகையுடன் காற்று நிரப்பிய பேரல்களை கட்டி, அவற்றை குளத்தில் மிதக்க விட்டு, அதன் மீது பிரமாண்டமான தெப்பம் கட்டப்பட்டு வருகிறது. 

Next Story