பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்


பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2022 4:30 PM GMT (Updated: 5 May 2022 4:30 PM GMT)

பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் - செஞ்சி செல்லும் சாலையில் அரசு பஸ்களில் மாணவர்கள், படிக்கட்டுகளிலும், ஏணிப்படிகளிலும் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மோகன், தனது காரிலிருந்து இறங்கி சம்பந்தப்பட்ட பஸ்சை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ்சில் போதிய அளவு இருக்கைகள் மற்றும் இடவசதி இருந்தும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டு மற்றும் ஏணிப்படிகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்ததுடன், வருங்கால தலைமுறையினராகிய நீங்கள் சமுதாய வளர்ச்சிக்கு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.

கூடுதல் பஸ்கள்

மேலும் பஸ்சில் எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலமுறை அறிவுரை வழங்கியும் மாணவர்களாகிய நீங்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அறிந்தும் தங்கள் விளையாட்டுத்தனத்தினால் இதுபோன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வருந்தத்தக்கது எனவும், இச்செயல் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும். எனவே இனிவரும் காலங்களில் பஸ்சின் உள்ளே அமர்ந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கியதோடு, மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டு மற்றும் ஏணிப்படிகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்தினார். மேலும் அதிகப்படியான நபர்கள் செல்லக்கூடிய வழித்   தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story