நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.7¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு


நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.7¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2022 10:26 PM GMT (Updated: 6 May 2022 10:26 PM GMT)

நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.7¼ கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு
நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.7¼ கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய நம்பியூருக்கு வந்தார். 
நம்பியூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை வணிக வளாகத்தினையும், காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நம்பியூர் பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் சார்பில் விவசாயி ஒருவருக்கு 500 மலைவேம்பு மற்றும் 10 பெருநெல்லி மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, பராமரித்து வருவதையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து எலத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நகமலை முதல் கடம்செட்டிபாளையம் வரை ரோடு அமைக்கும் பணியையும், வேமாண்டம்பாளையம் ஊராட்சியில் தூய்மைபாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.
நீர்த்தேக்க தொட்டி
மேலும் லாகம்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குருமந்தூர் ஊராட்சியில் 7 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்தேக்க தொட்டி மற்றும் நடுப்பாளையம் பகுதியில் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
இதேபோல் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் பாரத பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தீர்த்தம்பாளையம் முதல் காளியப்பம்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணியினையும், கெட்டிச்செவியூர் ஊராட்சி தண்ணீர்பந்தல் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரேமலதா, உதவிப்பொறியாளர் பெரியசாமி, விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story