ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது- 28,365 மாணவ-மாணவிகள் எழுதினர்


ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது- 28,365 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 6 May 2022 10:26 PM GMT (Updated: 6 May 2022 10:26 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 28 ஆயிரத்து 365 மாணவ -மாணவிகள் எழுதினார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 28 ஆயிரத்து 365 மாணவ -மாணவிகள் எழுதினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி.   பொதுத்தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வுகள் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 28 ஆயிரத்து 365 மாணவ -மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 113 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பறக்கும் படை
ஈரோடு மாவட்டத்தில் தனித்தேர்வர்களாக எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் 870 மாணவ -மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுபவர்கள் 228 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தனித்தேர்வர்களுக்காக 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு பணிக்காக 113 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களும், 203 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேர்வு பணியில் துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர், பறக்கும் படையினர் போதுமான அளவில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தீவிரமாக படித்தனர்
தேர்வு மையங்களில் மாணவ -மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த ஆய்வின்போது அவருடன் முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக தேர்வு எழுதும் மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவ -மாணவிகள் நேற்று 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வுக்காக தீவிரமாக படித்தனர். காலை 9.30 மணிக்கு மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 1.15 மணிக்கு மாணவ -மாணவிகள் தேர்வு மையத்தைவிட்டு வெளியே சென்றனர்.

Next Story