5 ரூபாயை ரோட்டில் போட்டு கவனத்தை திசை திருப்பி காண்டிராக்டரிடம் ரூ.1 லட்சம் நூதன திருட்டு


5 ரூபாயை ரோட்டில் போட்டு கவனத்தை திசை திருப்பி காண்டிராக்டரிடம் ரூ.1 லட்சம் நூதன திருட்டு
x
தினத்தந்தி 8 May 2022 9:46 AM GMT (Updated: 8 May 2022 9:46 AM GMT)

ஆவடி அருகே 5 ரூபாயை ரோட்டில் போட்டு கவனத்தை திசை திருப்பி காண்டிராக்டரிடம் ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,  

ஆவடி அடுத்த திருநின்றவூர் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 48). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் மதியம் திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று ரூ.1 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை 4 பேர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து உள்ளனர். 

அப்பொழுது சி.டி.எச் சாலையில் அம்பிகாபுரம் சந்திப்பில் வீட்டிற்கு செல்வதற்காக திரும்பும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூ.5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை சாலையில் போட்டுவிட்டு தியாகராஜனிடம் உங்களுடைய பணம் கீழே விழுந்துள்ளது என்று கூறினர். உடனே தியாகராஜன் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் தியாகராஜனின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story