3 இடங்களில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


3 இடங்களில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2022 10:24 AM GMT (Updated: 13 May 2022 10:24 AM GMT)

3 இடங்களில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

முத்தூர், மே.14-
ஊடையம் கிராமத்தில் விபத்துகளை தடுக்க 3 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அபாய வளைவுகள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ஊடையம் என்ற கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை கடந்து தார்ச்சாலையில் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் தினந்தோறும் கார்வழி, தென்னிலை, கரூர், திருச்சி, முத்தூர், காங்கயம், சென்னிமலை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் ஊடையம் பஸ் நிறுத்தத்தின் மேல்புறம், கீழ்புறம் பகுதிகளில் 3 அபாய வளைவுகள் உள்ளன. மேலும் பஸ் நிறுத்தம் அருகில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழைஎளிய மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆரம்ப, நடுநிலை கல்வி பயின்று வருகின்றனர்.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
இந்த நிலையில் ஊடையம் பஸ் நிறுத்தம் பகுதியில் தார்ச்சாலையில் தற்போது வரை வேகத்தடை எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் எதிர், எதிரே வரும்போது ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் சைக்கிள் மற்றும் பஸ் விட்டு இறங்கி செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் விபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்துடனும் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் ஊடையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி முன்புறம், துத்திக்குளம் பிரிவு, மூத்தாம்பாளையம் பிரிவு ஆகிய 3 இடங்களில் வேகத்தடை அமைத்து எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்து, இந்த இடத்தை கடந்து செல்லும் கனரக இருசக்கர வாகனங்கள் மெதுவாக செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story