உணவுப்பொருட்களில் கலப்படத்தை அறிவது எப்படி


உணவுப்பொருட்களில் கலப்படத்தை அறிவது எப்படி
x
தினத்தந்தி 13 May 2022 10:30 AM GMT (Updated: 13 May 2022 10:30 AM GMT)

உணவுப்பொருட்களில் கலப்படத்தை அறிவது எப்படி

மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அத்தகைய உணவை கலப்படம் இல்லாமல் சாப்பிடுவதே சிறந்தது. எங்கு பார்த்தாலும் உணவுப்பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. அந்த கலப்படத்தை கண்டறிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
பாலில் நீர் கலப்படத்தை கண்டறிய பளபளப்பான சாய்தள பரப்பின் மீது ஒரு சொட்டு பாலை ஊற்ற வேண்டும். அப்படியே இருந்தால் அல்லது வெண்மை தடம் பதிந்து மெதுவாக கீழிறங்கினால் பாலில் கலப்படம் இல்லை. நீர் கலப்படம் செய்யப்பட்ட பால் வெண்மை தடம் பதியாமல் உடனடியாக கீழிறங்கிவிடும். பாலில் சலவை தூள் கலப்படத்தை கண்டறிய 5 அல்லது 10 மில்லி பால் மற்றும் அதே அளவுள்ள நீரை எடுத்து கலந்து நன்றாக குலுக்கி வைக்க வேண்டும். பாலுடன் சலவை தூள் கலந்திருந்தால் தடிமமான படலம் உருவாகும். பால் மற்றும் பால் பொருட்களில் ஸ்டார்ச் கலப்பட்டு இருப்பதை கண்டறிய பாலை 5 மில்லி நீருடன் கலந்து கொதிக்க வைத்து பிறகு டிங்கர் அயோடினை 2 அல்லது 3 சொட்டு சேர்க்க வேண்டும். கலவையில் நீலநிறம் உருவானால் ஸ்டார்ச் கலந்துள்ளதை அறியலாம்.
நெய், வெண்ணெய்
நெய், வெண்ணெயில் உருளைக்கிழங்கு மற்றும் ஸ்டார்ச் கலந்து இருந்தால் டிங்கர் அயோடினை சேர்க்கும்போது நீல வண்ணம் தோன்றும். தூய்மையான தேனை கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரில் விட்டால் தேன் நீரில் கலக்காது. தேன் நீரில் கலந்தால் அதில் சர்க்கரை கலப்படம் உள்ளது என்பதை அறியலாம். சர்க்கரை, வெல்லத்தில் சாக்பொடி கலந்து இருந்தால் அதை கண்ணாடி டம்ளரில் எடுத்து கலக்கினால் அடியில் படியும்.
உணவு தானியங்களில் நிறம் கலந்து இருந்தால் கண்ணாடி டம்ளர் நீரில் போட்டு கலக்கினால் நிறம் மாறும். ராகி, கேழ்வரகில் ரோடமைன் பி கலந்து இருப்பதை அறிய பருத்தி பஞ்சை எடுத்து நீர் அல்லது தாவர எண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு ராகி, கேழ்வரகில் தேய்த்தால் வண்ணம் ஒட்டினால் அதில் ரோடமைன் பி கலந்துள்ளதை அறியலாம். பெருங்காயத்தை எடுத்து கரண்டியில் வைத்து நெருப்பில் காட்டினால் அது கற்பூரம் போல் எரிந்தால் கலப்படம் இல்லாத பெருங்காயம் ஆகும்.
மிளகு
கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரில் மிளகை எடுத்து போட்டால் தூய்மையான மிளகு அடியிலும், பப்பாளி விதை சேர்க்கப்பட்டால் அவை தண்ணீரில் மிதப்பதையும் காணலாம். மிளகாய் பொடியில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்டு இருந்தால் கண்ணாடி டம்ளர் தண்ணீரில் மிளகாய் பொடியை தூவினால் கலர் கீழே இறங்கினால் அவை கலப்படம் என்று தெரியவரும். இதுபோல் மரத்தூள் கலந்து இருந்தால் தண்ணீரில் மரத்தூள் மிதக்கும். மஞ்சள் கிழங்கை தண்ணீரில் போட்டால் நிறம் வெளியேறாமல் இருந்தால் அது நல்ல மஞ்சள் துண்டு ஆகும்.
பச்சை மிளகாய் மீது நிறம் தடவியிருந்தால், நீரில் நனைத்து தடவினால் நிறம் மாறும். காப்பித்தூளில் சிக்கரி கலந்து இருந்தால் தண்ணீரில் சிக்கரி தூள் மூழ்கும். காலாவதியான தேயிலையை கண்டறிய வடிகட்டும் தாளை எடுத்து அதில் தேயிலை தூளை வைத்து தண்ணீரில் கழுவினால் தாளில் கரை ஏற்பட்டால் கலப்படம் உள்ளது என அர்த்தம். ஆப்பிள் மீது மெழுகு தடவியிருந்தால் கத்தியை எடுத்து சுரண்டினால் மெழுகு ஒட்டும். இவற்றின் மூலம் கலப்படத்தை எளிதில் கண்டறியலாம்.
பதிவு, உரிமம் முக்கியம்
உணவு சார்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம், பதிவுச்சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். உரிய நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். இதை www.foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 413 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 456 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கிய 413 பேருக்கு ரூ.87 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 308 வழக்குகளுக்கு சிறைத்தண்டனையும், ரூ.21 லட்சத்து 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 232 சில்லரை வணிகர்கள் மீது ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்கள், விடுதிகள், விழாக்காலங்களில் வீடுகளில் எஞ்சிய உணவை வீணாக்காமல் ஏழைகளுக்கு வழங்க தன்னார்வ அமைப்பை 90877 90877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கலப்படம், தரம் குறைவான உணவுப்பொருட்கள் உள்ளிட்ட புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story