அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு.
x
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு.
தினத்தந்தி 14 May 2022 7:00 PM GMT (Updated: 14 May 2022 2:32 PM GMT)

முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஓட்டலில் தகராறு

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சுபகான். இவருடைய மகன் சிக்கந்தர் பாட்சா(வயது 37). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள தர்காவில் வழிபாடு செய்ய வந்தார். பின்னர் முத்துப்பேட்டையில் உள்ள ராமானுஜம்(50) என்பவருடைய ஓட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிட சென்றார். 
அப்போது ஓட்டல் தரப்பினர் கூடுதலாக பில் போட்டதாக கூறி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு நடந்தது. இதில் ஓட்டலில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் தரப்பினர் கேரளாவில் இருந்து வந்த வேனின் டயரை சேதப்படுத்தினர். 

மோதல் ஏற்படும் சூழல்

இந்த நிலையில் ஓட்டல் தரப்புக்கு ஆதரவாகவும், கேரளாவில் இருந்து வந்தவர்களுக்கு ஆதரவாகவும் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டு இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. 
இதனையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் திரளான போலீசார் அங்கு சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ராமானுஜம் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீதும், கேரளாவை சேர்ந்த சிக்கந்தர் பாட்சா கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீதும் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அ.தி.மு.க. நகர இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்திரபோஸ் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். 
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வாசலுக்கு வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால், பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. 

போலீசார் விசாரணை

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சந்திரபோஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 
அ.தி.மு.க. பிரமுகர் சந்திரபோசின் மகன் ராம், பா.ஜனதாவை சேர்ந்தவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் ஓட்டலில் நடந்த தகராறின்போது ஓட்டல் உரிமையாளருக்கு ஆதரவாக நின்றுள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஓட்டலில் நடந்த தகராறுக்கும், பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 
அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story