பாலையூர்- பெருங்கடம்பனூர் சாலையை புதுப்பிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பாலையூர்- பெருங்கடம்பனூர் சாலையை புதுப்பிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2022 7:00 PM GMT (Updated: 15 May 2022 3:31 PM GMT)

போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாலையூர் சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிப்பாளையம்:-

போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாலையூர் சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பாலையூர்- பெருங்கடம்பனூர் சாலை

நாகை அருகே பாலையூர் - பெருங்கடம்பனூர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், ஆழியூர், திருவாரூர் வரை செல்ல முடியும். இதன் வழியாக தினமும் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் செல்கின்றனர். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. 
போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் சாலை இருப்பதால் பொதுமக்கள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர். இதே சாலையில் சில பகுதிகளில் மண் சாலை போல காட்சி அளிக்கிறது. 

வாகன ஓட்டிகள் காயம்

மழை பெய்யும் போது இந்த பகுதி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகிறார்கள். இதே சாலை வழியாக வயல்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து, யூரியா, விதை போன்ற இடுபொருட்களை எடுத்துச்செல்லும், விவசாயிகள், நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் விவசாயிகளும் மோசமான சாலையில் சிரமப்படுகின்றனர். 
எனவே இந்த சாலையை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story