காஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்


காஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 May 2022 9:26 AM GMT (Updated: 18 May 2022 9:26 AM GMT)

காஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம், 

மழைநீர் சேமிப்புக்கும் வழிந்தோடும் மழை நீரால் மண் அரிமானத்தை தடுக்கவும், மண் வள பாதுகாப்பிற்கும், மிக சிறந்த மற்றும் நிரந்தரமான தீர்வு வயல்தோறும் பண்ணைக்குட்டை அமைப்பது ஆகும். அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண்வள பாதிப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

ஒரு ஏக்கர் நிலத்தில் 1 சென்ட் பரப்பளவில் (8 மீ x 5 மீ அல்லது 10 மீ x 4மீ) 1.5 மீட்டர் ஆழத்திற்கு வெட்ட வேண்டும். குறைந்தது ஒரு ஏக்கரில் ஒரு சென்ட் பரப்பளவு அதாவது 1 சதவீதத்தில் இருந்து அதிகபட்சமாக 10 சதவீத பரப்பளவில் 10 சென்டில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெறலாம். சமமான நிலங்களில் வரப்பு ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம்.

லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வானபகுதியை அறிந்து வெட்ட வேண்டும், வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயல் வரப்பினை பலப்படுத்தவும், சுற்றி அணை கட்டவும், மீதியை தேவைப்படும் இடங்களில் வயலை சமப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணை குட்டையின் கொள்ளளவு 60 கன மீட்டர் அதாவது 60,000 லிடடர் ஆகும். இதனை குறைந்த செலவில் அமைக்க நவீன எந்திரங்களை (பொக்லைன்) பயன்படுத்தலாம். அதனை அமைக்க ரூ.5 ஆயிரம் வரை செலவாகும்.

வயலில் வழிந்தோடி கடலில் கலக்கும்நீரை திறம்பட சேமிக்கலாம். மண் அரிமானம் தடுக்கப்படும். மண்வளம் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீர் உயரும், குடிநீரின் தரம் மேம்படும். நிலத்தடி நீரில் உப்பு நீங்கி நல்ல நீராகும். வெள்ளசேதம் தவிர்க்கப்படும். மழை குறைவான காலங்களில் வறட்சியை சமாளிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயருவதால் செடிகள், மரங்கள் உருவாகி தழைத்து பசுமை போர்வை உருவாகும். கடல் நீர் நிலத்தடி நீரில் ஊடுருவல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உருவாகும். பூமி சூடாகுதல் தானே தணிக்கப்படும். பண்ணை குட்டையின் அளவினை 10 சென்டுக்கு மேல் 50 சென்ட் பரப்பளவில் அமைத்து மீன் குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்யலாம். இது ஒருங்கிணைந்த பண்ணை முறைக்கு வழிவகுக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலையான வேளாண்மை மற்றும் நிலையான வருமானத்திற்கும் உறுதி அளிக்கும்.

பண்ணைக்குட்டையை கரும்பு, வாழை, முந்திரி, தென்னை, பலா தோப்புகளிலும், மணிலா, சூரியகாந்தி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் நிலத்திலும் வெட்டலாம்.

பண்ணைக்குட்டை அமைப்பதால் நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி தண்ணீரும் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உதவுகிறது. பண்ணை குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர்தேக்கமாக செயல்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும், உறிஞ்சப்படும் நீரினால் மரங்கள், செடிகொடிகள் எளிதாக வளரும். பசுமை போர்வையால் பூமி குளிர்ந்து வாயு குளிர்ந்து மேகங்கள் மழை கொடுக்கும்.

இதற்கு மேலாக குழியின் நடுவில் அல்லது விளிம்பு பகுதி சுற்றிலும் ஒன்றுக்கு மேலான பகுதிக்கேற்ப இலந்தை, நெல்லி, மா, பலா, எலுமிச்சை, பாதாம், முந்திரி, சப்போட்டா, நாவல், கொய்யா, சாத்துக்குடி போன்ற கனிதரும் மரங்களை நடலாம். வேம்பு, தேக்கு, பூவரசு, குமிழ், செஞ்சந்தனம், மூங்கில் போன்றவை வீடுகட்டவும், பணம் கொழிக்க உதவும் மரங்களை நடலாம். கருவேல், சவுண்டல், வாகை, வாதநாராயணன், கொடுக்காப்புளி போன்ற விறகு மற்றும் கால்நடைகளுக்கு தீவனம் தரும் மரக்கன்றுகளை தேர்வு செய்து நட்டு பயன் அடையலாம்.

மரங்களுக்கு அருகில் கொடி வகை காய்கறிகளை வளர்க்கலாம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலவகையான மண் உள்ளது. அனைத்து பகுதியிலும் விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைக்க திட்டங்கள் உள்ளன. உங்கள் பகுதி வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மேலும் விவரம் பெறலாம். பண்ணை குட்டை அமைத்து பயன்பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story