அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கர்நாடக வீரர்


அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கர்நாடக வீரர்
x
தினத்தந்தி 25 Jan 2022 9:57 PM GMT (Updated: 25 Jan 2022 9:57 PM GMT)

கர்நாடக கிரிக்கெட் வீரர் ஒருவர் அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

பெங்களூரு,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு மிகப்பெரும் பெயர் பெற்று விளங்கி வருகிறது. கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் கோடிக்கணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் கிரிக்கெட் விளையாட்டு பிரபலம் அடையவில்லை.

ஆனால் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை அந்நாட்டு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா நாட்டு கிரிக்கெட் அணியில் கர்நாடக மாநில மூடிகெரே தாலுகா கெஞ்சிகே கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான நாஸ்தோஷ் என்ற இளைஞர் இடம்பிடித்துள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நாஸ்தோஷ், பின்னர் சிக்கமகளூரு டவுனில் உள்ள ஒரு கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்து விளையாடினார். பின்னர் தமிழ்நாடு, பெங்களூரு கிளப் அணிகளுக்காக விளையாடினார். ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, மயங்க் அகவர்வால், ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்டோருடன் விளையாடிய நாஸ்தோசுக்கு இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வேலைக்காக அமெரிக்காவுக்கு சென்றார்.

அங்கு ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து விளையாடினார். இவரது ஆட்ட திறமையை பார்த்த அந்நாட்டு அரசு அவருக்கு தேசிய அணியில் இடம் வழங்கி தங்கள் நாட்டுக்காக விளையாட வைத்தது.

கடந்த ஆண்டு(2021) நடந்த இருபது ஓவர் உலக கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்காக நாஸ்தோஷ் விளையாடி உள்ளார். ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிராக களம் கண்டு அசத்தி இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெறும் இருபது ஓவர் தொடரிலும், அடுத்த ஆண்டு(2023) நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் நாஸ்தோஷ் அமெரிக்க அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியும் பெற்று வருகிறார்.

தற்போது அமெரிக்க குடியுரிமையும் பெற்று அங்கு வசித்து வரும் நாஸ்தோஷ், தனது சொந்த ஊரான கெஞ்சிகே கிராமத்திற்கு வந்து தனது குடும்பம், உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தார். அவருக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்கு மட்டுமல்லாது கர்நாடகத்திற்கும் பெருமை சேர்த்த நாஸ்தோசை பலரும் பாராட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Next Story