மனித உரிமைகள் அமைப்பின் இந்தியா தலைவர் பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 6 April 2022 10:23 AM GMT (Updated: 6 April 2022 10:23 AM GMT)

அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் பெங்களூரு விமான நிலையத்தில் அமெரிக்கா செல்ல இருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான ஆகார் படேல் இன்று, பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்தபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஆகார் படேல், மிச்சிகன், பெர்க்லி மற்றும் நியூயார்க்கில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல் மற்றும் அவரது சமீபத்திய புத்தகங்கள் குறித்த விரிவுரைக்காக அமெரிக்கா செல்லவிருந்தார். 

முன்னதாக அவருடைய பாஸ்போர்ட், சூரத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்கா செல்வதற்காக நீதிமன்றத்தின் மூலம் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார். இந்த நிலையில் அவருக்கு லுக் அவுட் சுற்றறிக்கையில் அவரது பெயர் இருப்பதாக கூறி அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். 

இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க பயணத்திற்காக நீதிமன்ற உத்தரவின் மூலம் பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றேன். ஆனால் வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி இந்தியாவை விட்டு வெளியேற விடாமல் பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன். 

குடிவரவு அதிகாரிகள், சிபிஐ என்னை இந்த பட்டியலில் சேர்த்ததாக கூறினர்" என்று பதிவிட்டுள்ள அவர் எதற்கு என்று பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும், "அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவுக்கு எதிராக மோடி அரசு தாக்கல் செய்த வழக்கின் காரணமாக லுக்-அவுட் சுற்றறிக்கையில் நான் இருப்பதாக சிபிஐ அதிகாரி கூறினார்" என்று அவர் கூறியுள்ளார். 

Next Story