வாங்கிய ஒரே நாளில் மின்சார வாகனத்தின் பேட்டரி வெடித்து விபத்து; மொத்த குடும்பமும் தீயில் சிக்கிய சோகம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 April 2022 10:19 AM GMT (Updated: 23 April 2022 10:21 AM GMT)

இந்த தீ விபத்தில் சிவகுமார், அவரது மனைவி மற்றும் அவர்களுடைய இரு குழந்தைகளும் தீக்காயம் அடைந்தனர்.

விஜயவாடா,

ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் காயமடைந்தனர்.

மின்சார வாகனத்தை வாங்கி ஒரு நாள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், இப்படி வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பது, இதுபோன்ற மின்சார வாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.  

சிவகுமார்(40 வயது) என்ற அந்த நபர் நேற்று ஒரு மின்சார ஸ்கூட்டரை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த நபர் படுக்கையறையில் பேட்டரியை சார்ஜிங்கில் வைத்திருந்த போது சம்பவம் நடந்துள்ளது.

நேற்றிரவு வீட்டின் முன் அறையில் வாகனம் சார்ஜ் போடப்பட்டு இருந்தது. அதன், பின்பக்க அறையில் சிவகுமார் குடும்பத்தினர் தூங்கினார்கள். திடீரென இன்று அதிகாலை 3 மணியளவில் பேட்டரி வெடித்தது.

வெடிவிபத்தை தொடர்ந்து வீட்டின் மின் வயர்கள் எரிந்து புகை வெளியேறியது. அதில் விழித்துக்கொண்ட அவர்கள், அவசர அவசரமாக என்ன செய்வதென்று தெரியாமல், சமையலறைக்கு சென்றனர். அங்கு வாசல் இல்லாததால் அவர்கள் வெளியேற வழியில்லாமல் தவித்தனர்.

இந்த தீ விபத்தில் சிவகுமார், அவரது மனைவி(30 வயது) மற்றும் அவர்களுடைய ஆறாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் இரு குழந்தைகளும் தீக்காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது மனைவி ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் உள்ளார். ஆனால், சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனால் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கி பயன்படுத்தலாம் என்று பொதுமக்கள் எண்ணுகின்றனர். ஆனால், இதுபோன்று அடிக்கடி ஏற்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள், மின்சார வாகனங்களை வாங்கும் எண்ணத்தை கேள்விக்குறியாக்கி உள்ளன.

கடந்த ஒரு வாரத்திற்குள், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இதுபோன்று இரண்டாவது முறையாக மின்சார வாகனம் வெடிவிபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, மின்சார இரு சக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து சிதறியதில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும் இருவர் தீக்காயம் அடைந்தனர்.

நாடு முழுவதும் அண்மை மாதங்களில் நடைபெற்ற வெவ்வேறு இதுபோன்ற சம்பவங்களில், மேலும் சில உற்பத்தி நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story