அணைகளில் போதிய அளவு நீர் இல்லை- கைவிரிக்கும் கர்நாடக அரசு


அணைகளில் போதிய அளவு நீர் இல்லை-  கைவிரிக்கும் கர்நாடக அரசு
x

கோப்பு படம் 

தினத்தந்தி 17 May 2024 2:08 AM GMT (Updated: 17 May 2024 2:21 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கிறது

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.

கூட்டத்தில் 4 மாநிலங்களும் மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு, தண்ணீர் வரத்து போன்ற விவரங்களை ஒழுங்காற்றுக்குழுவுக்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக அதிகாரிகள், மே மாதம் 10 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டும் என்றும், இதுவரை 3.8 டி.எம்.சி. தரப்பட்டு உள்ளது. மீதமுள்ள 6.2 டி.எம்.சி. தண்ணீரை இந்த மாதத்தில் தரவேண்டும். ஜூன் மாதம் தர வேண்டிய 9.17 டி.எம்.சி. நீரை முழுமையாக தரவும் கர்நாடகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறினர்.

ஆனால் கர்நாடக தரப்பில் பேசிய அதிகாரிகள், தங்களது அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை என்றும், எனவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க தொடர்ந்து வலியுறுத்தக்கூடாது எனவும் கூறினர். இதனைத் தொடர்ந்து ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, மே மாதத்துக்காக 2.5 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை கேட்டுக்கொண்டார்.

இத்துடன் கூட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் கர்நாடக அரசு அதிகாரிகள், மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து எடுத்துக் கூறி தண்ணீர் திறக்க ஆட்சேபனை தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story