மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 2 குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை; இளைஞர் பலி


மணிப்பூரில் மீண்டும் பதற்றம்:  2 குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை; இளைஞர் பலி
x

மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இம்பால்,

மணிப்பூரின் காங்கோபி மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களின் எல்லை பகுதியில் சினம் கோம் பகுதியில் இரு குழுவினர் இடையே நேற்றிரவு திடீரென துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சம்பவத்தில், கிராமத்தில் தன்னார்வலராக செயல்பட்டு வந்த நபர் ஒருவர் காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அவர் லைஷ்ராம் பிரேம் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில், குகி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை பரவியது. அப்போது, பள்ளிகள், வீடுகள் என கட்டிடங்கள் பல சூறையாடப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் ஆண்கள், பெண்கள் என பலர் பாதிக்கப்பட்டனர். ஆண்களில் சிலர் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். பெண்களை இழுத்து சென்று, ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் கூடுதல் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள சூழலில், நேற்று மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் 2-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது.

தேர்தல் ஆணையத்தின் செயலியின்படி, 2-வது கட்ட மக்களவை தேர்தலில் மணிப்பூரில் 78.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த சூழலில், மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குகி பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 4 துணை ராணுவ படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story