விவசாயிகள் போராட்ட களத்தில் ‘ஒரு டிராக்டர் ராணி’


விவசாயிகள் போராட்ட களத்தில் ‘ஒரு டிராக்டர் ராணி’
x
தினத்தந்தி 5 Dec 2021 10:22 AM GMT (Updated: 5 Dec 2021 10:22 AM GMT)

இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் 65 சதவிகிதப் பெண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயப் பணியில் ஈடுபடுகின்றனர்.

டெல்லி எல்லையில் ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் போராட்டத்தை விவசாயிகள் சங்கங்கள் அறிவித்திருந்தன. அன்றைய தினம் வன்முறை ஏற்பட்டு டெல்லி நகரமே பெரும் பதற்றத்தில் இருந்தது. அந்தச் சூழலிலும் பஞ்சாபைச் சேர்ந்த 40 வயது சர்ப்ஜீத் கவுர் என்ற பெண், 480 கி.மீ. தொலைவுக்கு டிராக்டரை தன்னந்தனியே ஓட்டி வந்து போராட்டத்தில் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் போராட்டத்தில் பங்கேற்பதற்கு 2 மாதங்களுக்கு முன்புதான் டிராக்டர் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜாஸ்ரார் கிராமத்திலிருந்து டெல்லி- அரியானா எல்லையில் உள்ள சிங்குவிற்கு டிராக்டரை ஓட்டி வந்தார்.

பெண்ணின் துணிச்சல்



அப்போது ஒரு பெண் இவ்வளவு துணிச்சலாக டிராக்டர் ஓடிவந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது குறித்து சில விஷங்களை இப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் சர்ப்ஜீத் கவுர், “3 விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தபோது, அதற்கு எதிராக எங்கள் கிராமத்தில் உள்ள 2,196 பேரிடம் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தேன்.

கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதியே டிராக்டரை ஓட்டிக்கொண்டு சிங்குவுக்கு வந்துவிட்டேன். அதன்பின்னர், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் அணிவகுப்பிலும் கலந்துகொண்டேன். அரியானாவின் சிங்கு மற்றும் டிக்ரி, உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூரிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக் கொண்டிருந்தார்கள். 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு என்னை யாரும் அழைக்கவில்லை. நானாகவே இங்கு வந்தேன். பெண்கள் பலவீனமானவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டத்துக்கு வலு சேர்ப்பவர்களாகப் பெண்கள் இருக்கிறோம்.

பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல

நாங்கள் விவசாயப் பணியையும் செய்து வருகிறோம். எங்களை எப்படி பலவீனமானவர்கள் என்று சொல்ல முடியும். விவசாயமும் செய்து கொண்டு குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் 65 சதவிகிதப் பெண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயப் பணியில் ஈடுபடுகின்றனர். எங்கள் கிராமத்தில் 5 ஏக்கரில் கோதுமை மற்றும் நெல் பயிரிட்டுள்ளோம். இதன்மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

4 குழந்தைகளைப் பிரிந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். விவசாயிகள் எதிர்காலத்துக்காக இங்கு போராடுகிறார்கள். போராட்டக் களத்தில் சமையல் செய்வது, சாலையைச் சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது போன்ற பணிகளைச் செய்தேன். இதுவும் ஒரு வகை சேவைதான். டிராக்டரிலேயே உறங்கினேன். கடைகளில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தினேன்.

உள்ளூர் மக்கள் உதவி

இங்குள்ள மக்கள் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். சில சமயங்களில் இங்குள்ளவர்களிடம் சைக்கிளை வாங்கிக்கொண்டு அந்தப் பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தேன். இங்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். பெரிய குடும்பமாக நாங்கள் வாழ்ந்தோம்.

இதுவரை இல்லாத அளவுக்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை யாரும் ஒருங்கிணைக்கவோ, மேற்பார்வையிடவோ இல்லை. நாங்களே தலைவர்களாக இருக்கிறோம். டிராக்டர் ஓட்டும்போது வானத்தில் பறப்பதைப் போன்று உணர்வேன். வாழ்க்கை முழுவதும் உரிமைக்காகப் பெண் போராடிக் கொண்டே இருக்கிறாள். மக்களுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். இந்த முறை நாங்கள் நடத்தும் போராட்டம் சமுதாயத்துக்கானது அல்ல, விவசாயிகளுக்கானது” என்றார்.

Next Story