சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஆலோசனைகள்


சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஆலோசனைகள்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:14 AM GMT (Updated: 21 Dec 2021 10:14 AM GMT)

உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் மாவட்டத்தில் உள்ள சிதர்கஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர், ஹிமான்ஷு குப்தா. இவர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் (சி.எஸ்.இ) மூன்று முறை தேர்ச்சி பெற்றவர்.

2018-ம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி இருக்கிறார். அப்போது 304-வது ரேங்க் பெற்றவர், ரெயில்வே துறை பணிக்கு (ஐ.ஆர்.டி.எஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

முதல் முயற்சியிலேயே பணி வாய்ப்பு கிடைத்ததால் அதில் சேருமாறு உறவினர்கள், நண்பர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த பணியில் சேர அவருக்கு விருப்பமில்லை. பெற்றோரும் வற்புறுத்தவில்லை. மகன் மீது நம்பிக்கை வைத்து இன்னும் நன்றாக படித்து உயர் பதவிக்கு செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து 2019-ம் ஆண்டு இரண்டாவது முறை தேர்வு எழுதியவர் 558-வது ரேங்க் பெற்று ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். ஆனாலும் அவருக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மூன்றாவது முறை முயற்சி செய்தவருக்கு இந்திய நிர்வாக சேவையில் (ஐ.ஏ.எஸ்.) இடம் கிடைத்துவிட்டது. ‘‘நான். ஐ.ஏ.எஸ். பணியில் சேரவே விரும்பினேன். ஏனெனில் அது அதிகாரத்துவத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டது’’ என்று சொல்கிறார்.

ஹிமான்ஷுவின் குழந்தைப் பருவம் மற்ற குழந்தைகளைப் போல் மகிழ்ச்சிகரமாக நகர வில்லை. அவரது தந்தை கூலி வேலை செய்து வந்தார். அதன் பிறகு டீ கடை தொடங்கினார். ஹிமான்ஷுவும் பள்ளிக் கூடம் முடிந்ததும் தந்தைக்கு உதவி செய்வதற்காக டீ கடைக்கு சென்றுவிடுவார். குடும்பத்தின் வறுமை சூழலை மாற்றுவதற்கு தான் கற்கும் கல்வியால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்தவர் நன்றாக படிக்க தொடங்கினார்.

இத்தனைக்கும் அவர் படிக்கும் பள்ளிக்கூடம் வீட்டில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அதனால் தினமும் 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. 12-ம் வகுப்பு முடிப்பதற்குள் ரொம்பவே சிரமப்பட்டுவிட்டார். டெல்லிக்கு சென்று இளங்கலை படிப்பை தொடர்ந்தவர் கஷ்டப்பட்டு படித்து இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்து இருக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஹிமான்ஷு குப்தா தரும் ஆலோசனைகள்:
1. படியுங்கள்-திருத்துங்கள் : எந்த தேர்வாக இருந்தாலும் எவ்வளவு படித்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை. படித்ததை எந்த அளவுக்கு நினைவில் பதிய வைத்திருக்கிறோம் என்பதே முக்கியமானது. படித்ததை திரும்பவும் படித்து எழுதிப் பார்க்காவிட்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வுக்கு தயாராகி இருந்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். முதலில் படித்த தகவல்கள் சரியானது தானா? என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ‘படியுங்கள்-மீண்டும் படியுங்கள்-எழுதி பாருங்கள்-திருத்தம் செய்யுங்கள்’ இந்த எளிய நுட்பத்தை பின்பற்றுவதை உறுதி செய்யுங்கள். இது தேர்வை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும்.

2. டிஜிட்டலை கையாளுங்கள்: தாங்கள் படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான நுட்பங்களை கையாளுகிறார்கள். நான் பாடப்புத்தகங்களில் படித்ததை மீண்டும் மீண்டும் படிப்பேன். அவற்றையே ஆடியோவாகவும் கேட்பேன். வீடியோவாகவும் பார்ப்பேன். இந்த பார்முலா எனக்கு உதவியது. உங்களுக்கு எது சிறந்தது என்பதை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். மற்றவர்கள் எந்த மாதிரியான யுக்தியை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை பார்த்து தடுமாறிவிடாதீர்கள். அவர்களை பின்பற்றி படிக்காதீர்கள். உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதையே பின் தொடருங்கள்.

3. உங்களை தயார்படுத்துங்கள்: தேர்வுக்கு தயாராகும் பணியில் ஈடுபடும்போது நிறைய பேர் தங்களை தயார்படுத்திக்கொள்ள தவறிவிடுகிறார்கள். உங்களின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி போன்றவற்றை சோதிக்கும் ஒன்றாகவும் இந்த தேர்வு அமையும். இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும். தேர்வில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்வதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

4. உங்களை நம்புங்கள்: யு.பி.எஸ்.சி என்பது கடினமான தேர்வாகும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும். எனவே இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்கள் திறன்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது முக்கியமானது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும். அதை அடைவதற்கு மட்டுமே ஆற்றலை செலவழிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேறு எந்த கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.

5. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: உங்களை சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்வதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எப்பொழுதும் அறிவார்ந்த நபராக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருக்கும் பயப்படாதீர்கள். உங்களுக்கு மட்டுமே நீங்கள் பயப்படுங்கள். அது தவறில்லை.

Next Story