கலைத்தொழில்களை மீட்கும் அமைப்பு..!


கலைத்தொழில்களை மீட்கும் அமைப்பு..!
x
தினத்தந்தி 11 Jan 2022 10:08 AM GMT (Updated: 11 Jan 2022 10:08 AM GMT)

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய சிறு/குறு தொழில்கள் முடங்கிவிட்டன. குறிப்பாக பாரம்பரிய கலைகளை அடிப்படையாக கொண்ட பல கலைத்தொழில்கள் சுணங்கிவிட்டன. அதை சீராக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறது, ‘டேக் கேர் இண்டர்நேஷனல்’ சமூக அமைப்பு. கலைத்தொழில்கள், சிறு/குறு தொழில்கள், அதன் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண் பதே இந்த அமைப்பினரின் முக்கிய பணி.

‘‘ஊரடங்கு காலத்தில், எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டன. பொருட்களை உற்பத்தி செய்யவும், அதை விற்பனை செய்யவும், உற்பத்தியாளர்கள் ரொம்பவே சிரமப்பட்டனர். லாபம் தரும் தொழில்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால், பாரம்பரிய கலைகளை அடிப்படையாக கொண்ட சிறு/குறு தொழில்களை பற்றி சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக மண் பானை உற்பத்தி, நெசவு தொழில், மூங்கில் பின்னல் வேலைகள், பாய் உற்பத்தி... போன்றவை எல்லாம் முற்றிலுமாக முடங்கிவிட்டன. 

அவற்றுக்கு உயிர் கொடுக்கும் நோக்கில், அமைப்பு பெயரிலேயே பிரத்யேக இணையதளம் ஒன்றையும் உருவாக்கினோம். இதில் அழிந்து வரும் தொழில்களை பற்றி பேசலாம். குறிப்பிடலாம். பாரம்பரிய கலைத்தொழில்களை மீட்க வழி தேடலாம். ஏன்..? தெரிந்த கலையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். 


தெரியாதவர்கள் இந்த இணையதளம் வாயிலாக புதிய கலைத்தொழில்களை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்’’ என பொறுப்பாக பேசுகிறார், இப்ராகிம். பாரம்பரிய கலைத்தொழில்களை மீட்டெடுக்க, ஆர்வமாய் செயல்படும் பல இளைஞர்களில் இவரும் ஒருவர். சென்னையை சேர்ந்த இவர், அழியும் நிலையில் இருக்கும் சில கலைத்தொழில்களை மீட்க கிரவுட் பண்டிங் என்ற புதுமையான முயற்சியையும் முன்னெடுக்கிறார்.

‘‘நிறைய கலைத்தொழில்களின் அழிவிற்கு, முதலீடு இல்லாததும், பொருட்கள் விற்பனையாகாததுமே முக்கிய காரணமாகின்றன. அதனால் பெரும்பாலானோர், கலைத்தொழிலை விட்டுவிட்டனர். இதற்கு ‘கிரவுட் பண்டிங்' (குழு நிதி திரட்டல்) மூலம் தீர்வு காண்கிறோம். பேஸ்புக் குழுக்கள் மூலமாக நிதி திரட்டி, அழியும் நிலையில் இருக்கும் கலைத்தொழில்களுக்கு உயிர் கொடுக்கிறோம். அதேபோல, விற்பனை பணிகளையும், சில பேஸ்புக் நண்பர்கள் மூலமாக செய்து கொடுக்கிறோம்’’ என்றவர், சமூகத்திற்கு தேவையான பல சிறு/குறு தொழில்களுக்கும், அது சார்ந்த உற்பத்தியாளர்களுக்கும், தன்னுடைய அமைப்பின் மூலம் நம்பிக்கை கொடுக்கிறார்.

‘‘பெரிதும் அறியப்படாத தொழில்களை எல்லாம், மக்கள் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை எப்படி மேம்படுத்தலாம், அந்தந்த தொழில்களுக்கு எப்படி புத்துயிர் கொடுக்க முடியும்... என்பன போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

மூலிகை சானிட்டரி நாப்கின், மூலிகை மாஸ்க், மூலிகை சானிடைசர்... போன்றவை எல்லாம் அவசியமான பொருட்கள் என்றாலும், அதுசார்ந்த உற்பத்திக்கு பெரும் வரவேற்பு இல்லை. இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்ய ‘கிரவுட் பண்டிங்' முறையில் நிதி உதவி ஏற்படுத்தி கொடுப்பதுடன், அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்குவதே, எங்களின் நோக்கம்’’ என்பவர், தமிழ்நாடு அரசுடன் இணைந்து, பல சமூக பணிகளை ஆற்றி வருகிறார்.

மழை வெள்ள மீட்பு பணிகள், ஏழை மக்களுக்கான வாழ்வாதார முன்னேற்ற பணிகள், குடிசை தொழில்களுக்கான திட்டமிடுதல், இயற்கை விவசாய விழிப்புணர்வுகள் போன்ற அரசின் சமூக பணி முயற்சிகளில், தன்னையும் ஐக்கியமாக்கி கொண்டுள்ளார்.

Next Story