சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஐ.டி.ஊழியர்..!


சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஐ.டி.ஊழியர்..!
x
தினத்தந்தி 11 Jan 2022 10:24 AM GMT (Updated: 11 Jan 2022 10:24 AM GMT)

ஐ.டி.வேலையில் பணியாற்றிக்கொண்டே, பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும், தினேஷ் சரவணனிடம் சிறு நேர்காணல்...

உங்களை பற்றி கூறுங்கள்?

வேலூர் என் சொந்த ஊர். ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறேன்.

சமூக சேவையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என்னுடைய அண்ணன் சரவணன் வேலூர் பகுதியில் சமூக சேவை செய்து வந்தார். அவர் 2014-ம் ஆண்டு திடீரென ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் செய்த சமூக சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் அதில் என்னை இணைத்துக்கொண்டேன். அதனால் என்னுடைய அண்ணன் பெயரையும், என் பெயரோடு சேர்த்து தினேஷ் சரவணன் ஆனேன்.

எத்தகைய சமூக சேவைகளை செய்கிறீர்கள்?

மரம் நடுகிறேன். ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறேன். அரசு பள்ளிகளில் தேவைப்படும் நவீன வசதிகளை செய்து கொடுக்கிறேன். கொரோனா காலங்களில் மருத்துவ உதவிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன். ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கிறேன். ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து கல்வி உதவிகளை வழங்குகிறேன்.

வேலூரில் குறுங்காட்டை உருவாக்கி கொண்டிருக்கிறீர்களாமே?

கடந்த 2021-ம் ஆண்டு வேலூர் மத்திய சிறை வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். அவை தற்போது நன்றாக வளர்ந்து நிற்கிறது. மேலும் அதே பகுதியில் இன்னும் ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளேன். இதனால் அந்த பகுதி (மியாவாக்கி காடு) குறுங்காடாக சில ஆண்டுகளில் மாறும். நகரின் மத்தியில் குறுங்காட்டை பார்க்க முடியும்.

மலைகள் தோறும் விதைப்பந்துகளை வீசும் திட்டம் எவ்வாறு உருவானது?


மரங்கள் இருந்தால்தான் மழை பொழியும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் மரங்களை வளர்க்க வேண்டும் என விரும்பினேன். அதற்காக விதைப்பந்துகள் தயார்செய்து நண்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சென்று மலைகளில் விதை பந்துகளை வீசி வருகிறோம். 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 6 லட்சம் விதைப்பந்துகள் மலைப்பகுதிகளில் வீசப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கி மலைகளில் வீசியுள்ளோம். ஏரிகள் மற்றும் குளங்களின் ஓரங்களில் பனை விதைகளை விதைத்து வருகிறோம்.

அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதிகளை உருவாக்கியது பற்றி கூறுங்கள்?

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக வேலூர் நடப்பாறையில் உள்ள ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் பெருமுகையில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் உருவாக்கி கொடுத்தேன். பெருமுகை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் மாற்றிக்கொள்ளும் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளேன்.

உங்களுக்கு கிடைத்த பாராட்டு, விருதுகளை பற்றி கூறுங்கள்?

என்னுடைய சமூக சேவையை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பாராட்டி உள்ளார். மேலும் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினத்தன்று அப்போதைய கலெக்டர் சண்முகசுந்தரம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் வள்ளலார் விருது, அப்துல்கலாம் விருது, நம்மாழ்வார் விருது உள்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

உங்களுடைய லட்சியம் என்ன?

ஏழை பெண்கள், அடித்தட்டு மக்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காக சமூக சேவை செய்து வருகிறேன். என்னைப்போல பத்து இளைஞர்களை சமூக சேவை செய்ய உருவாக்க வேண்டும் என்பதுதான் என் னுடைய லட்சியம்.

மரக்கன்றுகள் மீது ஆர்வம் ஏற்பட காரணம்?

மரக்கன்றுகளை பார்த்தாலே பச்சை பசேலென இருக்கும். மழை பொழியும். காய், கனி கிடைக்கும். எனவே 2014-ம் ஆண்டு முதல் வேலூர் பகுதியில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன். இதுவரை சுமார் 48 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளேன். வேலூரை பசுமையாக்க வேண்டும் என்பதே என் ஆசை.

Next Story