ஹீரோ எக்ஸ்.பல்ஸ் 200 மோட்டார் சைக்கிள்


ஹீரோ எக்ஸ்.பல்ஸ் 200 மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 2 Feb 2022 9:03 AM GMT (Updated: 2 Feb 2022 9:03 AM GMT)

அதிக அளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் புதிய வரவு எக்ஸ்.பல்ஸ் 200. நான்கு வால்வுகளைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மேம்படுத்தப்பட்ட மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. முதல் தவணை தயாரிப்பு முழுவதும் விற்று தீர்ந்த நிலையில் அடுத்த கட்ட உற்பத்தியைத் தொடங்கியுள்ள இந்நிறுவனம் அதற்கான முன்பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதியையும் உருவாக்கியுள்ளது. இது பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப 200 சி.சி. திறன் கொண்ட நான்கு வால்வு ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது.

இது 19.1 பி.எஸ். திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். அதேபோல 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இதில் புகுத்தப்பட்ட அதி நவீன தொழில்நுட்பம் சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. முகப்பு விளக்கு இரவிலும் பிரகாசமாக ஒளி கிடைக்க வழி செய்கிறது.

இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. முதல் முறையாக இருசக்கர வாகனங்களில் எல்.சி.டி. கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது, இந்த மோட்டார் சைக்கிளில் தான். இதனால் ஸ்மார்ட்போனுடன் இணைப்பை ஏற்படுத்தி, மொபைலுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தர முடியும். அழைப்பு குறித்த அறிவுறுத்தலையும் இது அளிக்கும். கியர் மாற்றம் குறித்த அறிவிப்பு, டிரிப் மீட்டர், ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் கொண்டது. சாகசப் பயணத்துக்கேற்ற வகையில் முன்புறம் மிக நீளமான சஸ்பென்ஷன் உள்ளது.

கரடு முரடான மலைப் பகுதிகளில் பயணிக்கும்போது என்ஜினை பாதுகாக்க இதில் உள்ள அலுமினியம் ஸ்கிட் பிளேட் உதவும். 10 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இதில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. நீண்ட தூர பயணத்திற்கு தேவையான உடைமைகளை வைப்பதற்கு வசதியான இட வசதி, ஹூக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மூன்று கண்கவர் வண்ணங்களில் (டிரையல் புளூ, பிளிட்ஸ் புளூ, ரெட் ரெய்ட்) இது வந்துள்ளது.

Next Story