அசத்தல் ஆசிரியர்..!


அசத்தல் ஆசிரியர்..!
x
தினத்தந்தி 6 Feb 2022 9:24 AM GMT (Updated: 6 Feb 2022 9:24 AM GMT)

குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடி கூலி வேலை பார்த்த குஜராத்தைச் சேர்ந்த 38 வயது கிரிஷ், இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராக உயர்ந்து, தனக்குக் கிடைக்காத விஷயங்களை மாணவர்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தான் பணியாற்றும் கிராமத்துப் பள்ளியின் முகத்தையே முற்றிலும் மாற்றியிருக்கிறார். இந்தப் பள்ளிக்கு மாணவர்கள் வரத் தயங்கிய காலம் இருந்தது. ஆனால், தற்போது அருகில் உள்ள தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பலர் கிரிஷ் பணியாற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். கிரிஷின் கற்பித்தல் தனித்துவமாக இருப்பதால் குழந்தைகளுக்குப் பிடித்துப் போனது. செய்முறை விளக்கம் கொடுக்கும்போது குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக இங்கு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்குக் கல்வியையும், பள்ளியின் அடிப்படை கட்டமைப்பையும் முதன்மையான இடத்துக்குக் கொண்டுவந்து கல்வி அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இது குறித்து கிரிஷ், “இந்தப் பள்ளியில் நான் பணிக்குச் சேர்ந்தபோது 230 மாணவர்களின் பெயர்கள் வருகைப் பதிவேட்டில் இருந்தது. ஆனால், 120 மாணவர்கள்தான் வழக்கமாக வந்து கொண்டிருந்தனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வீடு வீடாகச் சென்று பெற்றோரிடம் பேசி, அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு கூறினேன்.

கல்வியும் சரியில்லை, வகுப்பறையும் சுத்தமாகவும் இல்லை என்பதால் அரசுப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை என்று கூறினர். இவற்றை நான் சரி செய்கிறேன் என்று அவர்களிடம் உறுதியளித்தேன். அதன்பிறகு பள்ளிக்காக அழகான கட்டிடத்தைக் கட்டி, சுத்தமாகப் பராமரித்தோம். புதிய முறையில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தினேன்.

இதில் கவரப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். இதுதவிர, பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மாணவிகளும் வரத் தொடங்கினர்.

கழிப்பறை சுத்தமாக இல்லாததால் தாங்கள் பள்ளிக்கு வரவில்லை என்று மாணவிகள் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்து கொடுத்ததும், மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பள்ளியையும் மாணவர்களின் கழிப்பறையையும் நானே சுத்தம் செய்வேன். குழந்தைகளைக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

ஒரு குழந்தை ஏவுகணையைப் பற்றிக் கேட்டபோது, வீடியோ, படங்களைக் காட்டி விளக்கினேன். அந்தக் குழந்தைக்குப் புரியவில்லை. அதன்பிறகு நானே ஒரு ஏவுகணையைச் செய்து காட்டியபோது, அந்தக் குழந்தை எளிதாகப் புரிந்து கொண்டது. ஏவுகணை மட்டுமல்ல. பள்ளி மாணவர்களுடன் இணைந்து மாதிரி செயற்கை கோள் உருவாக்கி இருக்கிறேன்.

ரோபோ, புவி ஈர்ப்பு விசையை உணர்த்தும் கருவிகள், சூரிய குடும்பத்தை விளக்கும் மாதிரி அமைப்புகள், விண்வெளியை ஆராய உதவும் டெலஸ்கோப் போன்றவற்றை சுற்றியிருக்கிற வீணான பொருட்களைக் கொண்டே அறிவியல் செய்முறைகளை மாணவர்களுக்குச் செய்து காண்பித்து வருகிறேன். பாகங்களைச் சேர்க்கவும் குழந்தைகள் கற்றுக் கொண்டுள்ளனர். அறிவியல் பாடம் தொடர்பானவற்றின் மாதிரியைச் செய்து காண்பித்தால், குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்” என்றார்.

Next Story