இயற்கை தோட்டத்திற்குள் அமைந்த உடற்பயிற்சி கூடம்


இயற்கை தோட்டத்திற்குள் அமைந்த உடற்பயிற்சி கூடம்
x
தினத்தந்தி 6 Feb 2022 9:24 AM GMT (Updated: 6 Feb 2022 9:24 AM GMT)

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அத்தியாவசியமாக உள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஏ.சி. இருந்தாலும் வியர்வை வாசம், நெருக்கடியான சூழல், கூடுதலான கட்டணம் உள்ளிட்டவை உடற்பயிற்சிக் கூடங்கள் மீது இருக்கும் ஈர்ப்பை இளைஞர்களிடம் குறைத்துவிடுகின்றன. இதனால் உடற்பயிற்சிக் கூடங்களின் பக்கமே பலர் செல்வதில்லை.

ஆனால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவரும் வகையில் இயற்கை சூழலில் பழங்கள் மற்றும் காய்கறி தோட்டத்திற்கு மத்தியில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் உள்ள கோப்ராவ்குர்த் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ரிபேந்திர சிங் எனும் இளைஞர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை தயார் செய்துள்ளார். தன் நண்பர்கள் மற்றும் கிராம மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் அவர் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் 10 முதல் 20 பேர் வரை வந்த இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு, தற்போது 70 முதல் 100 பேர் வரை தினமும் வந்து செல்கின்றனர். இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு கட்டணம் எதையும் ரிபேந்திர சிங் வசூலிப்பதில்லை. முற்றிலும் இலவசம் என்பதால் பலரும் ஆர்வத்துடன் இங்கு வந்து உடற்பயிற்சி செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்த உடற்பயிற்சியின் மூலம் உடல் வலிமை கூடுவதுடன், இயற்கையான சூழலுக்கு மத்தியில் பயிற்சி செய்வதால் மன அமைதியும் அதிகரிப்பதாக அங்கு வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story