இயற்கை விவசாயம் செய்யும் மாணவிகள்


இயற்கை விவசாயம் செய்யும் மாணவிகள்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:29 AM GMT (Updated: 27 Feb 2022 10:29 AM GMT)

விவசாயம் அழிந்துபோகுமோ? என்ற அச்சத்தை போக்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. படித்த இளைஞர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் கைநிறைய சம்பாதித்தவர்களும் இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதேபோன்று, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், பள்ளியில் படித்துக்கொண்டே 80 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து அசத்துகிறார்கள்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிவப்பிரியா, ஹரிப்பிரியா ஆகிய சகோதரிகளின் குடும்பம் 5 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. அப்போது தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கினார்கள். இன்றைக்கு விவசாயம் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருவதோடு, குடும்பத்தைத் துரத்திய வறுமையையும் விரட்டியடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வீட்டின் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தில் பருப்பு வகைகள், புடலங்காய், காலிபிளவர், வெள்ளரி, முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் புதினா ஆகியவற்றை பயிரிட்டனர். படிப்படியாக 80 சென்ட் நிலத்திலும் விவசாயத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இதுபற்றி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹரிப்பிரியா கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் விவசாயம் எங்கள் குடும்பத்துக்கான முக்கிய வருவாயாக மாறியிருக்கிறது. எங்களிடம் வாடிக்கையாளர்கள் நேரடியாக காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மீதமாகும் விளைபொருட்களை சந்தைக்கு அனுப்புகிறோம். ஆரம்பத்தில் காய்கறிகளை பள்ளிக்கு எடுத்துச்சென்று ஆசிரியர்களுக்கு விற்பனை செய்தோம். இதற்காக விளையாட்டுகளை தவறவிட்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வுக்காக அப்படி செய்ததை எண்ணி தற்போது பெருமைப்படுகிறோம்” என்றார்.

11-ம் வகுப்பு படிக்கும் சிவப்பிரியா, “எங்கள் வீட்டில் 10 சென்ட் நிலத்தில் நானும் என் தங்கையும் விவசாயம் செய்வதைப் பார்த்து, அக்கம்பக்கத்தினர் தங்களது 80 சென்ட் நிலத்தை குத்தகைக்குக் கொடுத்தனர். மூன்று பேருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்கிறோம்.

காய்கறிகளை விளைவித்து ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பச்சிலை கசாயம், வெலுத்துள்ளி கசாயம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்கிறோம். இதன் மூலம் மண்ணுக்கு நுண்ணுயிர் சத்தும் தாவரங்களுக்கு ஆரோக்கிய வளர்ச்சியும் கிடைக்கிறது. எங்களுக்கு தெரிந்த விவசாயத்தை இணைய வழியிலும் நிறைய பேருக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம்” என்றார்.

மற்ற விவசாயிகளைப்போல இந்தச் சிறுமிகளும் இயற்கை பேரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனையும் மீறி விவசாயம் செய்து குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் `குட்டி விவசாயி’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.

Next Story