அழிந்துவரும் காண்டாமிருகங்கள்


அழிந்துவரும் காண்டாமிருகங்கள்
x
தினத்தந்தி 11 March 2022 4:21 PM GMT (Updated: 11 March 2022 4:21 PM GMT)

பூமியில் யானைக்கு அடுத்து மிகவும் பலம் வாய்ந்த உயிரினமாக காண்டாமிருகங்கள் இருக்கின்றன. எந்த அளவுக்குப் பலம் என்றால், பெரிய கார் ஒன்றை தனித்தனியாக பிரித்துவிடும் அளவுக்கு பலம் பெற்றது.

ஆனால், ‘எவை கடினமானவையோ, அவையே முதலில் உடைபடும் எனும் புத்தரின் வாக்கை நிரூபிப்பது போலவோ என்னவோ, பலம் வாய்ந்த காண்டாமிருகம் தற்போது அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதற்கு காரணம் கள்ளவேட்டை, கொம்புக்குக் கிடைக்கும் விலை.

மனித விரல்களில் வளரும் நகங்களும், காண்டாமிருகத்தின் கொம்புகளும் ‘கெரட்டின்' எனும் பொருளால் உருவாகின்றன. நகத்தைச் சாப்பிட்டால் எப்படி எந்த வகையான அதீதச் சக்தியும் கிடைத்துவிடாதோ, அதே போலத்தான் காண்டாமிருகத்தின் கொம்புகளைச் சாப்பிட்டாலும் எதுவும் கிடைத்துவிடாது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள்தான். ஆனால், சீன மருத்துவ முறை ஏற்படுத்திய குழப்பத்தால், இன்று காண்டாமிருகக் கொம்புகளுக்கு சர்வதேச கள்ளச்சந்தையில் ஏக கிராக்கி. அதனால் அந்த விலங்குகளை ஈவு இரக்கமின்றி வேட்டையாடுவது அதிகமாகிவிட்டது.

கருப்பு காண்டாமிருகம், வெள்ளை காண்டா மிருகம், சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகை இருக்கின்றன. இவற்றில் முதல் இருவகை ஆப்பிரிக்காவில் உள்ளன. எல்லா வகை காண்டாமிருகங்களும் கள்ளவேட்டை காரணமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிலும், ஆப்பிரிக்காவில் உள்ள காண்டாமிருகங்கள் கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும் என்பது வேதனை தரும் தகவலாகும்.


Next Story