விவசாயிகள் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் தம்பதி


விவசாயிகள் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் தம்பதி
x
தினத்தந்தி 13 March 2022 10:00 AM GMT (Updated: 13 March 2022 10:00 AM GMT)

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிரதீக்சாவும் அவரது கணவர் பிரதீக் சர்மாவும் உதவி வருகிறார்கள். பிரதீக், வங்கியில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இயல்பாகவே விவசாயம் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. கணவரை பின்பற்றி பிரதீக்சாவும் விவசாயத்தில் களம் இறங்கிவிட்டார்.

இது குறித்து பிரதீக்சா சொல்கிறார். “தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையைத் தர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சொல்கிறார்கள். இதனை எங்கள் சாதனையாகக் கருதுகிறோம். எங்கள் 8 வயது மகள் கூட, தான் விவசாயியாக வேண்டும் என்று சொல்கிறாள். இயற்கை முறையில் விளைவித்த விளைபொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தோம். இதற்கான ஆரம்பம் கடந்த 1983-ம் ஆண்டு என் கணவரின் கிராமத்திலேயே தொடங்கியது.

அப்போதே என் மாமனார் நவீன விவசாயம் குறித்த வெளிநாட்டு இலக்கியங்களை சேகரித்து வந்தார். அதன் மூலம் விவசாயக் கருவிகளையும் வாங்க ஆரம்பித்தார். ஆஸ்திரேலியா, ஐரோப்பிய விவசாய முறை குறித்த புத்தகம் என் கணவரிடம் இன்றும் உள்ளது. குக்கிராமத்திலிருந்து கொண்டு என் மாமனார் இவ்வளவு புத்தகங்களையும் சேகரித்ததை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்கிறார்.

பிரதீக்கின் தந்தை 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதன்பின் அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. எம்.பி.ஏ. படித்துவிட்டு வங்கிப் பணியில் சேர்ந்திருக்கிறார். பிரதீக்சா விவசாய பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர். அதுபற்றி பிரதீக்சா கூறுகையில், ‘‘என் தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி. என் மனதில் விவசாயம் பற்றி எந்த எண்ணமும் இருந்ததில்லை. நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சிந்திப்பதைப் போல், விவசாயம் என்பது படித்தவர்களுக்கானது இல்லை என்றே நினைத்தேன்.

திருமணத்துக்குப் பிறகு கணவர் மூலம் விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இடைத்தரகர்களால்தான் விவசாயிகளின் லாபத்தின் பெரும் பகுதி பறிபோகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு நிறுவனத்தை தொடங்கி, இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தோம்.

அதோடு ஊறுகாய், சாஸ், டீ மசாலா, கரம் மசாலா ஆகியவற்றையும் தயாரிக்கப் பயிற்சியளித்தோம். இத்தகைய மதிப்புக் கூட்டுப் பொருட்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்தது. இதன்பின்னர்தான் வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு இருவரும் விவசாயத்தில் இறங்கினோம்” என்றார்.

பிரதீக் கூறுகையில் “கடந்த ஆண்டு மட்டும் எங்களுக்கு ரூ.60 லட்சம் வருவாய் கிடைத்தது. இந்தப் பணத்தை நீண்ட காலத்துக்கு உதவக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கப் பயன்படுத்தினோம். இன்றைக்கு 6 மாநிலங்களிலிருந்து விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கி ஒருங்கிணைத்துள்ளோம். இந்தப் பணியில் 2 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. அடுத்த ஓராண்டில் இந்தப் பணியில் 20 ஆயிரம் குடும்பங்களை ஈடுபடுத்துவதே எங்கள் திட்டம். தற்போது 250-க்கும் மேற்பட்ட தயாரிப்பு களை வீட்டுக்கே சென்று வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.


Next Story