வேளாண் உற்பத்தித்திறன் எது?


வேளாண் உற்பத்தித்திறன் எது?
x
தினத்தந்தி 29 March 2022 4:23 PM GMT (Updated: 29 March 2022 4:23 PM GMT)

வேளாண்மையில் உற்பத்தித்திறன் என்பது அடிக்கடி முதன்மைப்படுத்தப்படுவது உண்டு. உலக வேளாண் வரலாற்றில் மனிதர்கள் தங்களுடைய உழைப்பை பயன்படுத்தி, உணவுத் தேவையை நிறைவு செய்துகொண்டனர்.

பின்னர், பண்ணை விலங்குகளை பயன்படுத்தி உணவு பெறும் நுட்பங்களை பெருக்கினர். இப்படியாக வேளாண்மை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு புதுவடிவத்தை பெற்றது.

அதன் பயனாக பொருளாதார கண்ணோட்டத்தில் வேளாண்மை பேசப்படும் சமீபத்திய காலங்களில், ஒரு ஏக்கரில் அல்லது ஒரு எக்டேரில் எவ்வளவு விளைச்சல் எடுக்கப்படுகிறது என்ற கணக்கை முன்வைத்து விவாதிக்கிறார்கள். முன்பெல்லாம் தேவைக்கான உற்பத்தி என்றிருந்தபோது, இந்த கணக்கு முன்வைக்கப்படவில்லை. தனக்கும் தனது அண்டை சமூகத்துக்கும் தேவையான உற்பத்தி நடந்தால் போதுமானது என்ற பார்வையே இருந்தது.

பின்னர் வணிகமயமாகிவிட்ட வேளாண் சூழலில் விளைச்சல் கணக்கு பெரிதும் முதன்மைப்படுத்தப்படுகிறது. இதை உற்பத்தித்திறன் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்ச விளைச்சல் எடுப்பவர், சிறந்த உற்பத்தியாளர் யார் என்று கவனிக்கப்படுகிறார். இது ஒரு வகையான ஒப்பீட்டு கணக்காகப் பார்க்கப்படுகிறது. இதேபோல விளைச்சலை நாட்டுக்கு நாடு ஒப்பிட்டுக்கொள்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி ெபற அவசர அவசரமாக திட்டங்களை வகுக்கின்றனர். அதிக அளவு எந்திரங்கள், அதிக அளவு வேதி உரங்கள் என்று மிகவும் செலவு பிடிக்கக்கூடிய எந்திரமயமான மேற்கத்திய வேளாண்மையை வலிந்து புகுத்துகின்றனர்.

உண்மையில் உற்பத்தித்திறன் எது என்பது, இவர்கள் கூறும் அளவுகோல்களை வைத்துப்பார்த்தால் மேற்கண்டவாறே தோன்றும். ஆனால், இது ஒரு குறையுடைய பார்வை என்றும், உற்பத்தித் திறனை அதாவது உண்மையான உற்பத்தித் திறனை, நீடித்த உற்பத்தித் திறனை அளவிட வேறு சில அளவீடுகளும் தேவைப்படுகின்றன எனவும் கூறுகிறார்கள்.

அதாவது, ஓர் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது எவ்வளவு ஆற்றலை உள்ளீடு செய்கிறீர்கள், எவ்வளவு ஆற்றலை அதிலிருந்து திரும்பப் பெறுகிறீர்கள் என்பதும் முக்கியமானது என வேளாண் துறை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.


Next Story