காட்டுத் தீ


காட்டுத் தீ
x
தினத்தந்தி 31 March 2022 4:22 PM GMT (Updated: 31 March 2022 4:22 PM GMT)

தீயை கண்டுபிடித்தது மனித குல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை. இந்த திருப்புமுனை நிகழ்ந்த இடம்? காடுகள் தான்.


காடுகளில் புற்கள் அதிகமாக இருந்தால் அங்கு காட்டுத் தீ ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம் புற்கள் அதிகமாக இருக்கும் காடுகளில், சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அதிகம் மேயவிட்டால், அங்குக் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சொற்பம். மழைக்காடுகளில் எப்போதும் ஈரம் இருக்கும். அங்கு நெருப்புக்கு தகவமைத்துக்கொள்ளாத மரங்கள் அதிக அளவில் இருக்கும். மேலும் புற்கள், செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என உயிரின அடர்த்தியும் அங்கு அதிகமாக இருக்கும். அங்கு காட்டுத் தீ ஏற்பட்டால், பாதிப்பு மோசமாக இருக்கும். வறட்சி மிகுந்த புதர்க் காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டால், அதன் பாதிப்பு ரொம்பவும் குறைவாகவே இருக்கும்.

காட்டுத் தீ என்பது குறிப்பிட்ட நாடுகள் அல்லது காட்டுப் பகுதிகளில் மட்டுமே ஏற்படும் என்று நினைத்தால், அது தவறு. புவியியல் ரீதியாக பல இடங்களிலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்து காட்டுத் தீ இருந்து வருகிறது. மனிதனால் ஏற்படக்கூடிய காட்டுத் தீ சம்பவங்கள், இயற்கையாக ஏற்படுவதை காட்டிலும் அதிகமாக இருக்கின்றன என்பதுதான் வித்தியாசம். இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீ எந்த அளவுக்கு நல்லது என்றால், அது ‘இரை அடர்த்தி'யை முறைப்படுத்துகிறது.

உதாரணமாக, காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் அழியும். அதனால் அங்குப் புற்கள் அதிகமாக வளர ஆரம்பிக்கும். அதை நோக்கிக் குளம்புள்ள மான் போன்ற தாவர உண்ணிகள் வரும். இதன் காரணமாகப் புலி போன்ற 'இரைகொல்லி'களுக்குத் தேவையான இரை கிடைக்கும். இதுதவிர, காட்டுத் தீ ஏற்பட்டு அங்கு வளரும் புதிய புற்களை நோக்கி வரையாடுகள் அதிக அளவில் வரும். காரணம் அந்தப் புற்களில் உள்ள ருசி. காட்டுத் தீயைப் பொறுத்த வரை இந்தியாவை ஆண்ட ஆங்கிேலயர்கள் தவறான கருத்தையே கொண்டிருந்தார்கள். அவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற வனச்சட்டத்தில் காட்டுத் தீ என்பது கெடுதலான ஒரு விஷயமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணம் இன்றும் தொடர்கிறது.


Next Story