புதுவை பல்கலைக்கழகத்தில் ஜப்தி நடவடிக்கை கோர்ட்டு உத்தரவு


புதுவை பல்கலைக்கழகத்தில் ஜப்தி நடவடிக்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Nov 2021 4:12 PM GMT (Updated: 17 Nov 2021 4:12 PM GMT)

தனியார் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி ஒப்பந்த தொகை வழங்காததால் புதுவை பல்கலைக்கழகத்தில் கார், பஸ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

காலாப்பட்டு
தனியார் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி ஒப்பந்த தொகை வழங்காததால் புதுவை பல்கலைக்கழகத்தில்  கார், பஸ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

மென்பொருட்கள் வாங்க ஒப்பந்தம்

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நாடு முழுவரும் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
பல்கலைக்கழகத்துக்கு தேவையான மென்பொருட்கள் லண்டனை தலைமையிடமாக கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் தனியார் நிறுவனத்திடம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.2 கோடியே 92 லட்சத்திற்கு ஒப்பந்தம் கோரியது.

ஐகோர்ட்டு உத்தரவு

இதையடுத்து அந்த தனியார் நிறுவனமும் பல்கலைக்கழகத்துக்கு தேவையான மென்பொருட்களை வழங்கியது. அதற்கான தொகையை பல்கலைக்கழகம் வழங்கவில்லை.
இது தொடர்பாக அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, புதுவை பல்கலைக்கழகம் தனியார் நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.3 கோடியே 42 லட்சம் வழங்க வேண்டும் உத்தரவிட்டார். ஆனால் பல்கலைக்கழகம் அந்த பணத்தை வழங்க வில்லை. 

ஜப்தி நடவடிக்கை

இதனை தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி தனியார் நிறுவனம் சார்பில் புதுச்சேரி கோர்ட்டில் கடந்த 27-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்பிலான தொகைக்கு பல்கலைக்கழகத்தின் கார், பஸ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுச்சேரி கோர்ட்டு ஊழியர்கள்  இன்று காலை புதுவை பல்கலைக்கழகத்திற்கு சென்று ஜப்தி நடவடிக்கையில் இறங்கினர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை 2 நாட்களுக்குள் செலுத்துவதாக கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story