கரூர் மாணவி தற்கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - சீமான்


கரூர் மாணவி தற்கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - சீமான்
x
தினத்தந்தி 21 Nov 2021 5:42 AM GMT (Updated: 21 Nov 2021 5:42 AM GMT)

கரூர் மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்நிறுத்தி உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த  பிளஸ் 2 மாணவி, பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதாஞ்சலி தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரடைந்ததாகவும் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் தற்கொலைகள் நிகழ்வது பெரும் வேதனையையும், கொடும் வலியையும் தருவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துகொள்வது பெரும் வேதனையையும், கொடும் வலியையும் தருகிறது. 

அரும்பாக மலரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம் வெதும்புகிறேன். எதுவும் செய்யவியலா கையறு நிலையும், பிள்ளைகளுக்கு நேரும் அவல நிலையும் கண்டு உள்ளம் குமுறுகிறேன். அறவுணர்ச்சியும், நீதியும் சாகடிக்கப்பட்டு பிஞ்சுகளின் உயிரைக் குடிக்கும் இக்குற்றச் சமூகத்தில் அங்கம் வகிப்பதற்கு குற்றவுணர்ச்சியில் வெட்கித் தலைகுனிகிறேன். 

பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக நேரும் இக்கொடுமைகள் அவர்களது எதிர்காலம், பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே, இவ்விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீரியக் கவனமெடுத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக தீவிரமான சட்டநடவடிக்கைகளை எடுக்கத் துணிய வேண்டும் எனவும், தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, அவர்களுக்கு உட்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். 

இத்தோடு, போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கி, அதுகுறித்து விழிப்புணர்வையும், பரப்புரையையும் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

Next Story