ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து


ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து
x
தினத்தந்தி 18 Dec 2021 10:15 AM GMT (Updated: 18 Dec 2021 10:15 AM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என போராடியவர்கள் மீதான வழக்கை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணை தலைவர் சுமதி உள்பட பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

இந்தியாவில் 2-வது கொரோனா அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த அனுமதியானது கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்தது.

இந்தநிலையில் புதியம்புதூர், சிப்காட் பகுதியை சேர்ந்த சிலர் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டி, ஆலை முன்பாக ஊழியர்களுடன் கூடியுள்ளனர். அவர்கள் மீது சிப்காட் மற்றும் புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில்தான் அவர்கள் கூடியுள்ளனர். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அந்த ஆலையின் பணியாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதாவது, இந்த கோர்ட்டில் வழக்கை ரத்து செய்யுமாறு மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதான வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story