தேசிய திறனாய்வு தேர்வு; 9-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!


தேசிய திறனாய்வு தேர்வு; 9-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!
x
தினத்தந்தி 26 Jan 2022 8:48 AM GMT (Updated: 26 Jan 2022 8:48 AM GMT)

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. அதன்மூலம், 1 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்  ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள் ஆவர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, 2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2022 மார்ச் மாதம் 05-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

மேலும், இதுபற்றிய கூடுதல் விவரங்களை http://www.dge.tn.gov.in/ மற்றும் https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1641974422.pdf  ஆகிய இணையதளங்களின்  வாயிலாக அறியலாம். 

Next Story