மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்


மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:55 AM GMT (Updated: 27 Jan 2022 9:55 AM GMT)

சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழாவில் கண்மாயில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை கிராம மக்கள் பிடித்தனர்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரி ஊராட்சியில் வேங்கைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள தொட்டிகாத்தான் கண்மாய் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. விவசாய பணிகளுக்காக கண்மாயில் உள்ள தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது தண்ணீர் கண்மாயில் குறைந்த நிலையில் கிராமத்தார் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தொட்டி காத்தான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.

முன்னதாக ஆயக்கட்டுகாரர்கள் முன்னிலையில் பச்சை கொடி வீசப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. வேங்கைப்பட்டி, பிரான்மலை, வையாபுரிபட்டி, ஆலம்பட்டி, தேனம்மாள்பட்டி, முட்டாகட்டி, ஒடுவன்பட்டி, கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்மாயில் ஆர்வத்துடன் இறங்கி போட்டிப்போட்டு வலைகள் மற்றும் சிறிய கூடைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். கட்லா, கெண்டை மீன்கள் உள்பட பல்வேறு மீன்கள் அதிக அளவில் சிக்கின.

கண்மாயில் ரசாயன கலப்படம் இல்லாமல் பிடிபட்ட மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள கிராம வீடுகளில் மீன் குழம்பு கமகமத்தது.

Next Story