மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு... விநாயகர் சிலை நிறுவி வழிபட்ட முஸ்லிம் குடும்பம்


மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு... விநாயகர் சிலை நிறுவி வழிபட்ட முஸ்லிம் குடும்பம்
x
தினத்தந்தி 24 Feb 2022 9:57 AM GMT (Updated: 24 Feb 2022 9:57 AM GMT)

ஹாசனில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம் குடும்பத்தினர் விநாயகர் சிலையை நிறுவி வழிபட்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் சமீபகாலமாக ஹிஜாப்- காவி துண்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிவமொக்காவில் பஜ்ரங்தள பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம் குடும்பத்தினர், விநாயகருக்கு சிலை நிறுவி பூஜை செய்து வழிபாடு நடத்திய சம்பவம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது என்றால் மிகையல்ல.

இந்த சம்பவம் ஹாசன் மாவட்டம் பேளூர் டவுனில் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவரது தந்தை பாஷா ஷாப். அவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மல்லிகார்ஜுன குழுமத்தை சேர்ந்த நாகண்ணா என்பவரிடம் விற்றுள்ளார்.

இந்த நிலையில் பேளூர் தீனதயாள் என்ற இடத்தில் உள்ள சென்னகேசவ சுவாமி ரியாசின் சகோதரர் மகனின் கனவில் வந்து, பேளூரில் நாகண்ணாவிடம் விற்ற நிலத்தில் உள்ள அரச மரத்தடியில் விநாயகருக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தும்படி கூறியதாம். அதன்படி ரியாஸ் குடும்பத்தினர் விநாயகர் சிலையை நிறுவினர். மேலும் அர்ச்சகர் மஞ்சுநாத சாஸ்திரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜைகளை நிறைவேற்றினார்.

இதில் ரியாசின் குடும்பத்தினர் கலந்துகொண்டு இந்து மத சடங்குகளை நிறைவேற்றியதுடன் சாமி கும்பிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இதில் இந்துக்களும் அதிகளவில் பங்கேற்றனர். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story